×
Saravana Stores

விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா?


கோவில்பட்டி: விளாத்திகுளம் அருகே தரைப்பாலத்தின் கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்குகிறது. உயிர் பலி வாங்கும் முன், புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் புதுப்பட்டி – அச்சங்குளம் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலையின் 1 கிமீ தூரத்தில் மேலக்கரந்தை, வவ்வால் தொத்தி கிராம பாசன கண்மாயின் மறுகால் தண்ணீர் செல்லும் 50 மீட்டர் அகலமுடைய ஓடை உள்ளது. மழை காலத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்யக்கூடிய மழைநீர், இந்த ஓடை வழியாக ஆற்றங்கரை பாசன கண்மாயை சென்றடைகிறது. இவை தவிர தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையின் விபத்து மற்றும் அவசர கால வழியாகவும் தாப்பாத்தி – அச்சங்குளம் – புதுப்பட்டி – சாலை உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

புதுப்பட்டி – அச்சங்குளம் சாலையில் உள்ள இந்த ஓடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயத்தில் தரைப்பாலம் வழியாக எந்தவொரு வாகனமும் செல்ல முடியாமல் வவ்வால் தொத்தி – கீழக்கரந்தை – மேலக்கரந்தை – வடமலாபுரம் வழியாக அச்சங்குளத்திற்கு சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை இருந்து வந்தது. தவிர கால்நடைகள், உழவு டிராக்டர்கள் விவசாய பணிக்கும் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மழை காலத்தில் தீவுபோல் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் இச்சுற்றுவட்டார அச்சங்குளம், வேடப்பட்டி, சொக்கலிங்கபுரம், புதுப்பட்டி கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு 50 மீட்டர் அகலமுள்ள இந்த ஓடையில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 50 மீட்டர் அகலமுள்ள ஓடையில் குறுகலான 5 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் கான்கிரீட் சுவர் இடிந்து பாலம் அந்தரத்தில் தொங்குகிறது. கடந்த டிசம்பரில் பெய்த பெருமழைக்கு பாலத்தின் இருபுறமும் சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. அதன்பிறகு பெயரளவில் ஒட்டுப் போட்டுள்ளனர். எனினும் இப்பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பாலம் மீது வாகனங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் மாற்றுப்பாதை அமைத்து போர்க்கால அடிப்படையில் ஓடையின் அகலத்திற்கேற்றவாறு அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Vlathikulam ,Kovilpatti ,Vlathikulam Highway Utkotam Pudupatti ,Acchankulam Road… ,Dinakaran ,
× RELATED விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் விதைகள் விதைப்பு பணி தீவிரம்