×

துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்

ஒரு கோயிலின் பெய ரையே தமது திருப்பெயராக ஈசன் ஏற்றுக் கொண்ட பெருமை கொண்டது திருத்தளி. தளி எனில் கோயில் என்றும் நாதர் எனில் இறைவன் என்றும் பொருள்படும். தான் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளிய இத்தலத்தில்தான் கௌரி தாண்டவம் ஆடி, அம்பிகைக்கு அவர் அருள் புரிந்தார். இந்த தாண்டவம், திரிபுரசம்ஹார தாண்டவம் என்றும் அழைக்கப்படும். கோயிலின் புராணம் ஈசன் தேவியுடன் தனிமையில் இருந்த சமயம். அப்போது விளையாட்டாக ஈசன் அம்பிகையின் கரிய நிறத்தை சுட்டிக் காட்டி ‘காளி’ என்று விமர்சித்தார். அதனால் பொய்க் கோபம் கொண்ட அன்னை தனது கருநிறத்தை நீக்கி, வெண்ணிறம் பெற்றாள்.

தேவியின் அந்த எழில் வடிவமே கௌரி என்னும் பெயர் பெற்றது. ஒரு பௌர்ணமி நன்நாளில் அந்தி வேளையில் ரம்யமான சூழலில்தான் கௌரியாக மாறினால் அன்னை. அந்த சூழலில் அவர் ஈசனிடம், திரிபுர சம்ஹாரத்தின்போது ஆடிய தாண்டவத்தை தனக்கு ஆடிக் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாள். அதற்கு ஈசன், அன்னையிடம், தான் பூலோகத்தில் திருப்பத்தூரில் எழுந்தருளுவதாகவும், அங்கே அவள் விரும்பியபடி திரிபுரசம்ஹார தாண்டவத்தை ஆடிக் காட்டுவதாகவும் வாக்களித்தார். மனம் மகிழ்ந்த கௌரி நந்திதேவருடன் திருப்பத்தூர் வந்தடைந்தாள். இத்தலத்தில் நந்தி மத்தளம் வாசிக்க, தேவி மனம் மகிழுமாறு ஈசன் திரிபுரசம்ஹாரத் தாண்டவத்தை ஆடிக் காட்டினார். கௌரி மனம் மகிழ்ந்ததால் இத்தாண்டவம் கௌரி தாண்டவமாயிற்று.

அதே சமயம் வைகுண்டத்தில் பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் திடீரென எழுந்து அமர்ந்தார். அவர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தார். அதைக் கண்ட மகாலட்சுமி, ‘ஐயனே தங்களது திடீர் மகிழ்ச்சிக்கான காரணத்தை நான் அறியலாமா?’ என்று கேட்டாள். அதற்கு திருமால், ‘கௌரியின் விருப்பத்தை நிறைவேற்ற ஈசன் கௌரி தாண்டவம் ஆடிய அழகை நான் மானசீகமாக தரிசித்தேன். உலகை உய்விக்கும் உன்னதத் தாண்டவம் அது. அத்தாண்டவத்தை தரிசித்த கௌரி பேறு பெற்றவள்’ என்று கூறினார்.

அதற்கு திருமகள், ‘பரந்தாமா! அந்த தாண்டவத்தை நானும் தரிசிக்க ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள். ‘தேவி, நீ திருப்பத்தூர் திருத்தலம் சென்று ஐயனை வேண்டித் தவம் புரிந்தால், நீயும் அந்த தாண்டவத்தை தரிசிக்கும் பாக்யம் பெறுவாய்,’ என்றார் திருமால். பெருமாளின் அறிவுரையின்படி திருமகள் திருப்பத்தூர் வந்தடைந்தாள். காரையூர் எனும் இடத்தில் இருந்தபடி திருத்தளிநாதரை எண்ணி முந்நூறு ஆண்டுகள் தவம் இருந்தாள் திருமகள். பின் அசரீரி வாக்கின்படி மூல மூர்த்தமாகிய சுயம்புலிங்கத்தைத் தரிசிக்க தேவி திருப்பத்தூர் சென்றாள்.

அங்கு திருமகள் ஸ்ரீதளி தீர்த்தத்தின் தென்கரையில் கௌரீசனை வழிபட்டாள். அவளுடைய பக்திப்பூர்வமான வழிபாட்டில் மனம் மகிழ்ந்த ஈசன், திருமகளுக்கும் கௌரி தாண்டவம் ஆடி அருளினார். புராதனச் சிறப்புக்களும் தெய்வ சாந்நித்யமும் திகழும் திருத்தளியில் அருளாடல் புரிகிறார் ஐயன் திருத்தளிநாதர். இத்தலத்தின் ராஜகோபுரம் எழிலுடன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதன் வடப்பக்கம் அம்பாள் சந்நதிக்குச் செல்ல தனியாக ஒரு கோபுர வாயில் உள்ளது. வெளிப் பிராகாரத்திலேயே வடகிழக்கு மூலையில் அன்னை சிவகாமசுந்தரி அம்மன் கிழக்கு நோக்கி தனி சந்நதியில் வீற்றிருக்கிறாள்.

அம்பாள் கோட்டத்தின் சுவரே ஆலயத்தின் வடக்கு மதிலாக அமைந்திருப்பது விசேஷம். இதற்கு வடமேற்கில்தான் தளி தீர்த்தம் இருக்கிறது. நடுப் பிராகாரத்தில் பலிபீடம், துவஜஸ்தம்பம், பக்கத்தில் அஸ்திரதேவர். தெற்கு பகுதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகன், ஈசனின் கௌரி தாண்டவத்தைத் தரிசிக்க வடக்கு நோக்கி காட்சி தருவதாக ஐதீகம். வடக்குப் பிராகாரத்தில், அழகிய கருவறை விமானத்துடன் யோக பைரவர். இந்த ஆலயத்தில் பைரவமூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் ‘வைரவன் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. கோரைப் பற்கள் இரண்டுடன், முப்புரிநூலும், முத்துமாலையும் அலங்கரிக்க, இடக்கரத்தை தொடையில் வைத்து, வலக்கரத்தில் இடியை ஏந்தி யோக நிஷ்டையில் திருக்காட்சி தருகிறார் ஈசன்.

ஈசன் இடியை கையில் ஏந்தி இருக்க காரணம் பைரவர். ஈசனின் ஆலயத்தில் தானும் இடம்பெற விரும்பி பைரவர் தவம் இருந்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி, ‘பைரவா! நீ இங்கேயே தங்கி எமது பக்தர்களைக் காப்பாற்றுவாயாக!’ என்ற பணித்தருளினார். ஒரு நாள் பெரிய பூதம் ஒன்று ஒரு பெரிய பாறையை தலையில் சுமந்தபடி ஒரு கையில் இடியைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தது. பைரவரின் சந்நதியை நெருங்கியதும் பூதத்தின் தலையில் இருந்த மலை தானே கீழே விழ, அதன் கையிலிருந்த இடி தூக்கி எறியப்பட, அதை பைரவர் தன் வலக்கரத்தால் பிடித்தார். பூதவடிவம், இந்திரன் மகன் ஜெயந்தனாக உருமாறி அவருக்கு சாப விமோட்சனம் கிடைத்தது.

இந்திரனின் மகனான ஜெயந்தன். ஒரு முறை வித்யாதரப் பெண் ஒருத்தியை பலவந்தப்படுத்திய காரணத்தால் அவள் ஜெயந்தனை பூதமாக மாறுமாறு சாபமிட்டாள். இத்தல பைரவர் முன் அவன் சாபம் தீரும் என்று விமோசனமும் கூற, அப்படியே நிகழ்ந்தது. அந்த நாள் சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஆகும். இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஜெயந்தன் திருப்பத்தூர் பைரவர் சந்நதிக்கு வருகை தந்து பைரவரைப் பூஜிக்கும் விழா, ஜெயந்தன் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இடி விழுந்தாற் போன்ற துயரப் பிரச்னைகளையும் இந்த பைரவர் இனிமையாகத் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

உள் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ள நடராஜர் சந்நதிதான் கௌரி தாண்டவம் நிகழ்ந்த சிறப்புக்குரிய சந்நதி. வலக்காலை முயலகன் மீது ஊன்றி, இடக்காலைத் தூக்கி வீசி, பத்து கரங்களுடன் திகழும் பெருமான், சடைமுடியில் கங்கையும், பிறை நிலவும் தரித்திருக்கிறார். இடப்புறம் அன்னை வலக்கரத்தில் மலர் தாங்கி, இடக்கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் ஈசனின் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் காண்கிறாள். ஈசனின் வலப்புறம் நந்திதேவர் மத்தளம் இசைக்கிறார்.

மூன்று நிலைகள் கொண்ட கருவறை விமானம் முழுவதும் கல்லினால் வடிவமைக்கப்பட்டது. விமானத்தின் தெற்கில் கீழே தட்சிணாமூர்த்தியும், மேலே யோக தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் யோக நரசிம்மரும், வைகுண்ட நாதரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். சந்நதியில் சுயம்பு மூர்த்தமாக ஐயன் திருத்தளிநாதரின் தரிசனம் காணப்பெறலாம்.

புராணச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிக்க இந்த திருத்தலத்திற்கு அப்பர் சுவாமிகளும், ஞானசம்பந்தரும் வருகை புரிந்து பதிகம் பாடியிருக்கிறார்கள். இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடி நெகிழ்ந்திருக்கிறார். கௌரி தாண்டவம் ஆடிய கௌரீசனையும், திருமால், லட்சுமி போன்றோரால் வழிபடப்பெற்ற ஐயன் திருத்தளிநாதரையும் வணங்குவோர்க்கு வேண்டியன அருளும் பைரவ மூர்த்தியையும் வழிபடுவோர் எல்லா மேன்மைகளும் பெறுவர்.மதுரையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்தளி. காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம்.

தொகுப்பு: மகி

The post துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர் appeared first on Dinakaran.

Tags : Thiruthalinathar ,Thirutali ,Eason ,Tali ,Nadar ,Swayambu Murthy ,Gauri ,
× RELATED நிறம் மாறும் அதிசய லிங்கம்