×

இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம்!!

சென்னை: இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் ககைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; சென்னை மாநகரக் காவல்துறை சில நாட்களுக்கு முன்பு சுவடு என்னும் இணைய இதழின் ஆசிரியர் மன்சூர் மற்றும் அவரது இரண்டு புதல்வர்கள் உள்ளிட்ட ஆறு நபர்களைக் கைது செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153 மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (உபா) சட்டத்தின் பிரிவு 13 இன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்து, ஜெர்மெனி உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு இஸ்லாத்தின் கோட்பாடுகளைத் திரித்துச் செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்றுக் கொள்ளாத ஓர் அமைப்பாகும். தேர்தலில் வாக்களிப்பதையும் எதிர்க்கும் ஓர் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் இலட்சியமும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலட்சியமும் மதத்தால் வேறுபட்டாலும் ஒரே மாதிரியானவையாகவே அமைந்துள்ளன. எனவே தான் பிரிட்டன் ஜெர்மனி வங்காள தேசம் போன்ற ஜனநாயக நாடுகளும் சவுதி அரேபியா போன்ற மன்னராட்சி நாடுகளும் இந்த அமைப்பைத் தடை செய்துள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இந்த அமைப்பின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இத்தகைய தடம் புரண்ட அமைப்பின் கோட்பாடுகளைப் பரப்பினார்கள் என்றும் இந்த அமைப்பிற்குத் தமிழ்நாட்டில் ஆதரவைத் திரட்டினார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு இதழியாளர் மன்சூர் உட்பட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மன்சூரும் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது எத்தகைய ஜனநாயக விரோதக் கோட்பாட்டை எடுத்துரைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோ அதைத் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தினந்தோறும் தனது சாகாக்களில் செய்து வருகின்றது.

கைது செய்யப்பட்ட மன்சூர் உள்ளிட்டோரின் அமைப்பு இஸ்லாமிய அரசை நிறுவுவோம் என்ற இலட்சியத்துடன் செயல்படுவதாகச் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்று நாள் தோறும் சகாக்களில் உறுதி எடுத்து வருகின்றது. இந்த நிலையில் இத்தகைய கொள்கையைப் பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

இது நியாயம் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்களும் கைது செய்யப்பட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் சட்டமாக இருப்பதற்கு முற்றிலும் தகுதியில்லாத உபா சட்டம் இந்தக் கைது நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட மன்சூர் உள்ளிட்டோருக்கு ஆர்எஸ்எஸ் காரர்கள் போன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டாலும் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்துரிமைக்கு விரோதமான நடவடிக்கை.

எனவே கைது செய்யப்பட்ட ஆறு நபர்கள் மீதும் பதியப்பட்ட உபா பிரிவு விலக்கப்பட்டு இவர்கள் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா போன்ற பன்முகச் சமுகத்தில் வாழ்வதற்கு நபிகளார் காட்டி தந்துள்ள வழிமுறைகளுக்கு நேர் முரணான கோட்பாடுகளை மன்சூரும் அவருடைய மகன்கள் ஹமீது ஹீசைன், அப்துல் ரஹ்மான் மற்றும் அந்த அமைப்பினர் பரப்பி வந்ததாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருப்பின் இத்தகைய வழிகேடர்கள் விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Mansoor ,Chennai ,People's Party ,Jawahirulla ,MLA ,Mansoor Inter ,Chennai Municipal Police ,Mansour ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்; அதிகாரிகள்...