×

அரக்கோணம் அருகே தனியார் நிலத்தில் 807 செம்மரச்செடிகளை வெட்டி சாய்த்த மர்ம ஆசாமிகள்: போலீஸ் விசாரணை


அரக்கோணம்: அரக்கோணம் அருகே தனியார் நிலத்தில் இருந்த 807 செம்மரச்செடிகளை மர்ம ஆசாமிகள் வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மிட்டப்பேட்டையை சேர்ந்தவர் சங்கரன்(43). இவர், மைசூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, சொந்தமான நிலம் பெருமாள் ராஜபேட்டையில் உள்ளது. இங்கு, சுமார் 5 ஏக்கரில் 2,500 செம்மரச் செடிகளை வருவாய்துறை அனுமதியுடன் நட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரனின் மனைவி துளசி விவசாய நிலத்திற்கு சென்றார்.

அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி சாய்க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் துளசி புகார் செய்தார். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, 807 செம்மரச்செடிகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது மரங்களை வெட்டி சாய்த்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரக்கோணம் அருகே தனியார் நிலத்தில் 807 செம்மரச்செடிகளை வெட்டி சாய்த்த மர்ம ஆசாமிகள்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Sankaran ,Mittapettai ,Ranipettai district ,Mysore ,Dinakaran ,
× RELATED சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில்...