காட்டுமன்னார்கோவில், மே 31: காட்டுமன்னார்கோவிலில் விஷம் குடித்ததாக விஏஓ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட அழிஞ்சமங்கலத்தில் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த ராமானுஜம் மகன் வீரராஜ்(38) என்பவர் தந்தையின் பணிக்காக கருணையின் அடிப்படையில் விஏஒ வாக பணியாற்றி வந்தார். இவர் திட்டக்குடியில் பணியாற்றி குறுகிய காலத்தில் காட்டுமன்னார்கோவிலுக்கு கடந்த 1 வருடத்திற்கு முன் பணிமாறுதல் பெற்று வந்தார்.
தற்போது அழிஞ்சமங்கலம் வருவாய் கிராமத்தில் பணி செய்து வந்துள்ளார். இக்கிராமத்திற்கு உட்பட்ட தொண்டமாநத்தத்தில் உள்ள சுமார் 140 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களை அங்குள்ள 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் குத்தகையின் அடிப்படையில் கடந்த 2 தலைமுறைகளாக விவசாயம் பார்த்து வந்தனர். இந்த விவசாய நிலத்திற்கு 2023-24ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடங்கல் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் வீரராஜிடம் விவசாயிகள் சென்ற போது, இந்த நிலங்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களுக்கு ஏற்கனவே முறைகேடாக அடங்கல் வழங்கியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்பகுதி விவசாயிகள் தங்களிடம் இருந்த 10க்கும் மேற்பட்ட அரசு அளித்த ஆவணங்களுடன் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி உத்தரவின் பேரில், வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பிரமிளா ஆகியோர் விசாரணை நடத்தி கடந்த 27ம் தேதி சார் ஆட்சியருக்கு அறிக்கை அளித்தனர். அதன்படி முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் வீரராஜை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று வீரராஜ் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்து உறவினர் ஒருவரால் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வருவாய்துறை, காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் விஷம் குடித்ததாக விஏஓ மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.