×

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தல், வாகன திருட்டை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை

 

செங்கல்பட்டு, மே 31: வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் செங்கல்பட்டு வழியாக மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருவதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் மற்றும் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டின் முக்கிய பகுதிகளான செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம், இராட்டிணங்கிணறு ரயில்வே மேம்பாலம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை, ஐய்யப்பன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்ப்ரனீத் உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் விடிய விடிய தொடர் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வாகனங்களில் வருவோர் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்துள்ளனரா என்பதை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

The post செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தல், வாகன திருட்டை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Madhurandakam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...