×

மோடி, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு அனைத்து கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம்

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் சிலை அருகே நேற்று கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

வட மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழர்களை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இழிவாக பேசியதையும், தமிழகம் வரும்போது வாக்குக்காக தமிழர்களை புகழ்ந்து பேசுவதும் கண்டிக்கத்தக்கது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பலதரப்பட்ட சமூக அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை வண்ணார்பேட்டையிலுள்ள நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக மாடி கட்டிடத்தில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டது.

The post மோடி, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு அனைத்து கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amitsha ,PM Modi ,Kanyakumari ,Madurai ,Periyar Bus Stand ,Periyar Dravidar Kagam ,Minister of Interior ,Amitshah ,Pudukkottai District ,Party ,
× RELATED குவைத் தீ விபத்தில்...