×

சிறுநீர்ப்பை புற்றுநோய் குறித்து ஓவிய கண்காட்சி மூலம் விழிப்புணர்வு: காவேரி மருத்துவமனை முன்னெடுப்பு

சென்னை: சிறுநீர்ப்பை புற்றுநோய் குறித்து ஓவிய கண்காட்சி மூலம் காவேரி மருத்துவமனை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற ஓவிய கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இந்த ஓவிய கண்காட்சியை பிரபலமான ஓவிய நிபுணரான டிராட்ஸ்கி மருது மற்றும் காவேரி மருத்துவமனை செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இயக்குனர் வைத்தீஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறுநீர்பையில் தோன்றுகின்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த ஓவிய கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, உலகளவில் காணப்படுகின்ற 11வது மிகப்பொதுவான புற்றுநோயாகும். இந்திய மக்கள் தொகையில் சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது, ஒரு அரிதான, வேகமாகப் பரவக்கூடிய புற்றுநோய் வகையாகும். ஒவ்வொரு 100,000 நபர்களில், 3.57 என்ற அளவில் புற்றுநோய் இருப்பதாக 5 ஆண்டுகால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்புற்றுநோயினால், சுமார் 11000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான முக்கியமான இடர் காரணிகளாக புகைப்பிடித்தல், வேதிப்பொருட்களுக்கு வெளிப்படுதல், குடும்பத்தில் பிறருக்கு புற்றுநோய் இருந்த வரலாறு, நாட்பட்ட சிறுநீர்பை பாதிப்பு நிலைகள் ஆகியவை இருக்கின்றன. இந்நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. ஆகவே, இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிக அவசியம்.
ஓவியம் மற்றும் கலை என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம். இச்செயல்திட்டத்தின் வழியாக, தொடக்க நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து கற்பிக்க இயலும் என் நம்புகிறோம். சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை போன்ற பயனளிக்கும் பல்வேறு சிகிச்சை வழிமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதை முன்னிலைப்படுத்துவதும் இந்த ஓவியக் கண்காட்சி நிகழ்வின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post சிறுநீர்ப்பை புற்றுநோய் குறித்து ஓவிய கண்காட்சி மூலம் விழிப்புணர்வு: காவேரி மருத்துவமனை முன்னெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,CHENNAI ,Alwarpet, Chennai ,
× RELATED சிறுநீரகம் செயலிழந்த கர்ப்பிணிக்கு...