×

பிஎப் பாக்கி ரூ.2.44 கோடியில் 30% செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: பிஎப் பாக்கி 2.44 கோடியில், 30 சதவீதத்தை செலுத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2006 மற்றும் 2010ம் ஆண்டுகளில் கோவை உள்ளிட்ட இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. 2012ல் இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தவில்லை என்று 2019ம் ஆண்டு புகார் எழுந்தது. இந்த புகார் மீது விசாரணை நடத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 2 கோடியே 44 லட்சம் ரூபாயை செலுத்துமாறு கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அண்ணா பல்கலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2 கோடியே 44 லட்சம் ரூபாயில் 30 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்யுமாறு 2023 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவின்படி, வருங்கால வைப்பு நிதி பாக்கியில் 30 சதவீதமான 73 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை செலுத்தும் நிலையில் பல்கலைக்கழகத்தின் நிதிநிலை இல்லை. தற்போதைய நிலையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனு நகலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிய ஆணையர் தரப்புக்கு வழங்குமாறு அண்ணா பல்கலைக்கழக தரப்புக்கு உத்தரவிட்டனர்.

 

The post பிஎப் பாக்கி ரூ.2.44 கோடியில் 30% செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,CHENNAI ,Anna University of Technology ,Coimbatore ,
× RELATED பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக...