×

பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி

சென்னை: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான் என்றும், பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992ம் ஆண்டு பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறிமுகப்படுத்தியது அதிமுக தான். இதில் நானே பாதிக்கப்பட்டேன். அதில் வேடிக்கை என்னவென்றால் 2000 ஓட்டு இருந்த இடத்தில் 2300 ஓட்டு போட்டார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தேன்.

அப்போது எவ்வளவு ஓட்டு பதிவானது, எவ்வளவு ஓட்டுகள் எண்ணப்பட்டது என்ற கணக்கை மட்டும் எடுங்கள் என்றேன். அவர் கணக்கை எடுத்தார். கிட்டத்தட்ட ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 20 பூத்களில் 2000 ஓட்டுகளுக்கு 2300, 2200 என்று பதிவானது. காரணம் என்னவென்றால், அதிகமான பேலட் பேப்பர் கொண்டு வருவார்கள். அதையும் கைப்பற்றி குத்தி, குத்தி ஓட்டு போட்டார்கள். இதை எல்லாம் செய்தது அதிமுக என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
இன்றைக்கு தேர்தல் கமிஷன் அவர்களிடம் உள்ளது. மாநில அரசிடம் இல்லை. இந்தியா முழுவதும் தேர்தல் கமிஷன் யாருடைய கையில் இருக்கிறது என்பது தெரியும். அந்த தேர்தல் கமிஷன் இருக்கும்போது ஏன் பயப்படுகிறார்கள்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல், ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள் என்று சொல்லும் அளவுக்கு நடந்தது. எப்படியாவது பாஜவுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்காக வைத்துக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு என்று சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு நிறைய இடங்களில் டெபாசிட் போனது. இந்த இடைத்தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடிக்கு மேலும் சிக்கலாகி விடும் என்ற பயம். சசிகலா வேறு கட்சியை இணைக்க போறேன் என்று அறிக்கை விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளீர்கள். தேர்தல் புறக்கணிப்பு என்றால் கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. நாங்கள் ஒரு கணக்கு எடுக்க போகிறோம். அதாவது அதிமுகவில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா என்று கணக்கெடுப்போம். அவர்கள் ஓட்டு போட்டு இருந்தால் எடப்பாடியை புறக்கணித்து விட்டார்கள் என்று அர்த்தம்.

தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சொல்லிய பிறகும், மீறி யாராவது ஓட்டு போட்டால் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் என்று சொல்ல எடப்பாடி தயாரா? சொல்ல மாட்டார். ஏதோ அவர்கள் பாஜவுடன் மறைமுக ஒப்பந்தம் வைக்கலாம் என்று பார்க்கிறார்கள். எதையும் சந்திக்கின்ற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. வன்னிய பெருமக்களுக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின் செய்ததை போல யாரும் செய்யவில்லை என்பது அவர்கள் எல்லாருக்கும் தெரியும். 20 சதவீதம் இடஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். அதன் மூலமாக எத்தனை பேர் டாக்டர்கள் ஆனார்கள். இன்ஜினியர் ஆனார்கள். எத்தனை பேர் குரூப் 1 சர்வீசில் ஐஏஎஸ் ஆனார்கள். இதை எல்லாம் அந்த மக்கள் மறந்து விடுவார்களா என்ன?. ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாதம்தோறும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கொடுத்ததன் விளைவு, அந்த தாய்மார்கள் எப்படி நன்றியுணர்வோடு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். அதை போல, 20 சதவீதம் இடஒதுக்கீட்டால்தான் நாம் இவ்வளவு வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து, ஆயிரம் ராம்தாஸ்கள் சொன்னாலும் மனச்சாட்சியுள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்தவர்கள், வன்னியர்கள் அத்தனை பேரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள். மக்களவை தேர்தலில் பாமகவை மக்கள் கைக்கழுவி விட்டார்கள். அவர்கள் சின்னமே இப்போ போய்விட்டது. போன தேர்தலில் ஒரு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்திற்கு ஓட்டு கேட்டால் அந்த ஊரில் உள்ளவர்கள் மதிப்பார்களா? அதெல்லாம் இருக்கிறது. எங்களுக்கு அப்படி இல்லை. 2019ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,R.S.Bharti ,CHENNAI ,DMK ,RS Bharti ,Organizational Secretary ,Anna University, Chennai ,ADMK ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை...