×

மோட்டார் வாகன சட்ட திருத்தம் விரைவில் அமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம்: 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து

சென்னை: தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுதல், 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து செய்வதுடன், பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மாநில குற்ற ஆவண காப்பக தரவுகளின் படி 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் 66,841 விபத்துகள் பதிவாகி, அதில் 18,074 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் 18 வயது ஆகாத சிறுவர்கள் பலர் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது போன்ற சிறுவர்கள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகளும் நேரிடுகிறது. அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதால் ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதை தடுக்க போக்குவரத்துத்துறை பல்வேறு நடவடிக்கையில் எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் சிறுவர்கள் வாகன ஒட்டினால் அதற்கான தண்டைனையை கடுமையாக்கியும், பொதுவாக லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கியும் மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்த சட்டத்திருத்தங்களை வரும் ஜூன் 1ம் தேதிமுதல் அமல்படுத்தவும் மாநில போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தியது. நாடு முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு அமைந்தவுடன் இவை அமல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறித்தியுள்ளது. அதன்படி, ஓட்டுனர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் ஓட்டுநர் சோதனைகளை மேற்கொள்ள முடியும். ஓட்டுநர் உரிமத் தகுதிக்கான சான்றிதழ்களை தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களே வழங்கலாம். விண்ணப்பதாரர் தனியார் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இவ்வாறு ஓட்டுநர் தேர்வை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சான்றிதழ்களை ஒன்றிய அரசே வழங்கும். இருப்பினும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் ஒன்றிய அரசிடம் சான்றிதழ் பெறாத பட்சத்தில், விண்ணப்பதாரர் ஆர்டிஓவில் நடத்தப்படும் ஓட்டுநர் தேர்வில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். மேலும் புதிய விதிமுறைகளின் படி, ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

நான்கு சக்கர வாகன ஓட்டுநர் மையத்திற்கு 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். தனியார் ஓட்டுநர் உரிம பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
இதைத்தவிர பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகனப் பயிற்சியை 4 வாரங்களில், குறைந்தபட்சம் 29 மணிநேரத்தில் முடிக்க வேண்டும். இதில், பயிற்சி வகுப்புகள் 8 மணி நேரமும், செயல்முறை பயிற்சிகள் 21 மணி நேரமும் இருக்க வேண்டும். கனரக மற்றும் நடுத்தர மோட்டார் வாகனங்களுக்கு 38 மணிநேர பயிற்சி இருக்கும். இதில் 8 மணிநேர பயிற்சி வகுப்புகள் மற்றும் 31 மணிநேர செயல்முறை பயிற்சிகள் ஆகியவை அடங்கும். காற்று மாசுபாட்டு விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக 900,000 பழைய அரசு வாகனங்களை படிப்படியாக கழிவு செய்யப்படவுள்ளது. இந்த புதிய விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் இனி ரூ.25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அந்த வாகன பதிவு சான்றிதழும் ரத்து செய்யப்படும். மேலும் அந்த நபர் தனது 25வது வயது வரை லைசன்ஸ் பெற முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

The post மோட்டார் வாகன சட்ட திருத்தம் விரைவில் அமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம்: 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு