×

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை: பக்தர்கள் பீதி

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை சிறுத்தை ஒன்று கடந்து சென்றது. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மற்றும் சந்திரகிரி பகுதியில் ஸ்ரீவாரி மிட்டா என 2 நடைபாதைகள் உள்ளன. இப்பகுதிகளில் சிறுத்தை, புள்ளிமான்கள், மலைப்பாம்புகள், கரடி, யானைகள் ஆகியவை அவ்வப்போது நடமாடுவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு அலிபிரி மலைப்பாதையில் நடந்த இருவேறு சம்பவங்களில் சிறுத்தை தாக்கி ஒரு சிறுமி இறந்தார். மற்றொரு சிறுவன் காயத்துடன் மீட்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு 9.20 மணியளவில் அலிபிரி மலைப்பாதையில் உள்ள மொகால் மெட்லு பகுதியில் பக்தர்கள் கண்முன் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. இதைக்கண்ட பக்தர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து உடனடியாக திருப்பதி வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். சாலையை கடந்த சிறுத்தை வயது முதிர்ந்து இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை: பக்தர்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Thirumalai ,Khanmun road ,Eumalayan ,Temple ,Alibri ,Sriwari Mita ,Chandragiri ,Tirupathi Highways ,
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு