×

சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50 பயணிகள் அவதி: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி செல்லும் விமானம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அருகேயுள்ள காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரூ, கொச்சின் ஆகிய இடங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் சென்னையில் இருந்து காலை 11.40க்கு சேலம் வரும் விமானம், 12.10க்கு சென்னை புறப்பட்டு செல்லும். அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து காலை 11.40க்கு சேலம் வரும் விமானம், 12.10க்கு சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்று அங்கிருந்து சேலம் வந்து, மாலை 5 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். அதே போல பெங்களூரில் இருந்து தினமும் பகல் 3.15 வரும் விமானம் மாலை 4.20க்கு கொச்சி புறப்பட்டு செல்லும். பின்னர் கொச்சியிலிருந்து புறப்பட்டு சேலம் வழியாக பெங்களூரூ சென்றடையும்.

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவை இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுற்றுலா சென்று மகிழ்ந்து வருகின்றனர். இதன்படி நேற்று பெங்களூரில் இருந்து 3.15 மணிக்கு வரவேண்டிய கொச்சி விமானம் வரவில்லை. திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என 31 பேர் விமான பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறியதால் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பெங்களூரில் இருந்து விமானம் புறப்பட்ட போது திடீரென கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாக பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து திட்டமிட்ட நிலையில் இப்படி திடீரென ரத்து செய்தால் என்ன செய்வது என பயணிகள் கேள்வி எழுப்பினர். இந்த விமானத்தை நம்பி 50க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் பெங்களூரில் இருந்தே மாற்று விமானம் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘3மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்த நிலையில் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இந்த விமானத்தை நம்பி கொச்சியில் ரயில்பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ளோம். இவை அனைத்தும் வீணாகிப் போனது. விமான நிறுவன அதிகாரிகள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விமானத்தை நம்பி மருத்துவ சிகிச்சை செய்ய திட்ட மிட்டிருந்தால் அவர்கள் நிலை என்னவாகும். 5 நாளில் விமான டிக்கெட் கட்டணம் உங்களுக்கு திரும்ப வந்துவிடும் என கூறிவிட்டு சென்றுவிட்டனர்’ என்றனர்.

விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் நின்று கோஷமிட்டனர். பின்னர் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50 பயணிகள் அவதி: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Salem—Kochi ,Salem ,Salem airport ,Kochi ,Kamalapuram Airport ,Chennai ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்