×

ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால அட்டவணை; குமரிக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா..? பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: ஜூலை மாதம் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியாக உள்ள நிலையில், புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்று ரயில் பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ரயில்வே துறை புதிய ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் அதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவாக செய்து வருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று கிராசிங்குக்காக ரயில்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் வேகமாக இயங்கி வருகின்றன. இந்த காரணத்தால் வருகின்ற கால அட்டவணையில் பல்வேறு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் வர இருக்கிறது. தென்மாவட்ட பயணிகள் இடையே வருகின்ற கால அட்டவணை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில்வே கால அட்டவணையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

* நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு பகல்நேர வந்தே பாரத் வாரத்திற்கு 4 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக அறிவித்து தினசரி ரயிலாகவும் மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – பெங்களூரு ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி சூப்பர் பாஸ்ட் ரயில் என மாற்றம் செய்து கால அட்டவணையை பெங்களூருவுக்கு காலை 7 மணிக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். இதேப்போல் இந்த ரயில் பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்குப் பிறகு புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – மும்பை வாரத்துக்கு 5 நாட்கள் செல்லும் ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து நாகர்கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்தும், இதைப்போல் மறு மார்க்கம் இரவு 10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறும் இயக்க வேண்டும்.
* கொச்சுவேளி – நாகர்கோவில் பயணிகள் ரயில் காலையில் நாகர்கோவில் வந்து சேருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதைப்போல் நாகர்கோவிலிருந்து கொச்சுவேளி செல்லும் ரயிலும் கால தாமதமாக இயங்குவதாக பல்வேறு புகார் உள்ளது. எனவே இந்த இரண்டு ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்து காலதாமதத்தை தவிர்க்க சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும்.
* அடுத்த கோரிக்கையாக திருநெல்வேலியில் இருந்து காலையில் புறப்படும் நாகர்கோவில் பயணிகள் ரயில் மற்றும் நாகர்கோவில் கொச்சுவேளி பயணிகள் ரயில் ஆகிய 2 பயணிகள் ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி கொச்சுவேளி பயணிகள் ரயில் என்று இயக்க வேண்டும்.
* இருவழி பாதை பணிகள் முடிந்த நிலையில் கன்னியாகுமரி நிஜாமுதீன் திருக்குறள் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* நாகர்கோவிலிருந்து மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து மாலை 4:30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் இந்த ரயில் திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்.
* நாகர்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கால அட்டவணை மாற்றம் செய்து இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுமாறு இயக்கி நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். இந்த ரயிலை மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து மதியம் 12.30 க்கு புறப்படும் வகையில் இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர சூப்பர் பாஸ்ட் ரயில் வேகத்தை அதிகப்படுத்தி நாகர்கோவிலிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோயம்புத்தூருக்கு காலை 6 மணிக்கு செல்லுமாறும், மறுமார்க்கமாக கோயம்புத்தூரிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு நாகர்கோவில் வருமாறும் மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
* நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலை திருநெல்வேலி மதுரை, திருச்சி வழியாக இயக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கப்பட்ட நிலையில், இந்த சிறப்பு ரயில் மதுரையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும்.
* கொச்சுவேளி நிலம்பூர் ரயில் கொச்சுவேளி நாகர்கோவில் பயணிகள் ரயிலாக பராமரிப்புக்காக வேண்டி நாகர்கோவில் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். இந்த கொச்சுவேளி நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
* கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த ஜெயந்தி ஜனதா ரயிலை புனேவுடன் நிறுத்தி விட்டனர். இந்த ரயிலுக்கு மாற்றாக திருவனந்தபுரம் – லோகமான்ய திலக் நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
* கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக நெடுந்தூர ரயில்களை இயக்க திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற நெடுந்தூர ரயில்களை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ரயில் நேரத்தில் மாற்றம் வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தினசரி ரயிலாக இயக்கப்படும் மூன்று ரயில்களும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் புறப்பட்டு சென்னைக்கு காலை 4 முதல் 7 மணிக்குள் சென்று சேர்ந்து விடுகிறது. ஏதாவது ஒரு ரயில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இரவு 8.30 அல்லது 9 மணிக்கு பிறகு புறப்பட்டு காலை 7 முதல் 8 மணிக்கு சென்னை செல்வதாக இயக்க வேண்டும். இதைப்போல் மறுமார்க்கமாக ஒரு ரயில் இரவு 8.30 அல்லது 9 மணிக்கு பிறகு சென்னையிலிருந்து புறப்பட்டு காலை 8 முதல் 9 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது அனைத்து விதமான பணிகள், இரவு உணவையும் முடித்து விட்டு புறப்படும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிகாலை குருவாயூருக்கு செல்லுமா?
மதுரை – புனலூர் மற்றும் சென்னை – குருவாயூர் ஆகிய 2 ரயில்களும் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது. ஆகவே இந்த 2 ரயில்களின் வேகத்தையும் அதிகப்படுத்தி சென்னையிலிருந்து குருவாயூர் மார்க்கம் பயணிக்கும் போது நாகர்கோவில் டவுன் ஸ்டேஷனுக்கு இரவு 8.30 மணிக்கு வருமாறு கால அட்டவணை மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது குருவாயூருக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லும் கால அட்டவணை அமையும். இது ஆன்மிக பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

காலி நடை மேடைகள்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த 3 தினசரி ரயில்களை, ரயில்வே நாகர்கோவில் டவுன் வழியாக இயங்குகிறது. கன்னியாகுமரி பெங்களூரு ரயில் பெட்டிகள் கன்னியாகுமரி சென்னை ரயிலாக இயக்குவதால் பகல் நேரத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் காலியாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் ஒரு நடைமேடை காலி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலி நடை மேடையை பயன்படுத்தி நாகர்கோவில் – தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும்.

இதைப்போல் இரவு நேரத்தில் கன்னியாகுமரி – பெங்களூரு ரயிலின் காலி பெட்டிகள் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் ஒரு நடைமேடை காலி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலி நடை மேடையை பயன்படுத்தி தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் திட்டத்தின்படி தாம்பரம் – ஐதராபாத் சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

இரவு 7.30க்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை அதிகப்படுத்தி கால அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும். அதன்படி இந்த ரயில் தற்போது இயங்கும் மாலை 5.50 கால அட்டவணையில் இருந்து மாற்றம் செய்து மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியில் சூரியன் மறைவை பார்த்துவிட்டு சுற்றுலா மற்றும் ஆன்மிக பக்தர்கள் பயணிக்கும் வகையில் படிப்படியாக இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இரவு 7.30க்கு பிறகு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்
நாகர்கோவிலிலிருந்து மங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டனர். இந்த ரயிலுக்கு மாற்றாக திருவனந்தபுரம் – மங்களூரு 16347-16348 ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

The post ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால அட்டவணை; குமரிக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா..? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு