×

பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது: ஜிகே.வாசன்

சென்னை: பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது. குறிப்பாக நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி அவர்களின் 10 ஆண்டுகால பணி பெரிதும் பாராட்டத்தக்கது. பிரதமர் நமது இந்திய நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பேணிப்பாதுகாப்பவர். அவர்களின் ஆன்மிக ஈடுபாட்டை இந்தியர்கள் நன்கு அறிவார்கள்.

உலகம் முழுவதும் பிரதமர் சுற்றுப்பயணம் செய்யும் போது திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பற்றியும் தொடர்ந்து பேசி வருவது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கிறது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார முடிவிற்குப் பிறகு பிரதமர் இந்தியாவிலே ஆன்மிக இடங்களுக்கு சென்றதையும், தியானம் செய்ததையும் அனைவரும் நன்கு அறிவோம். அந்த வகையிலே உலகப்புகழ் பெற்ற தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலே அமைந்திருக்கிற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் 2 நாள் தியானம் செய்வது என்பது அவரது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டு.

இதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் தேர்தல் காலத்திலே தலைவர்கள் வெளிநாடுகளுக்கு போகலாம், குளிர் பிரதேசங்களுக்கு போகலாம், சுற்றுலா செல்லலாம். ஆனால் பிரதமர் ஆன்மிக உணர்வோடு ஒரு புனித இடத்திலே தமிழகத்தில் தியானம் செய்வதை குற்றம்சாட்ட நினைப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல. எனவே பிரதமர் அவர்களின் தமிழக ஆன்மிகப் பயணத்தை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது: ஜிகே.வாசன் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chennai ,Prime Minister Modi ,Ma. Ex. ,G. K. Vasan ,Narendra Modi ,GK Vasan ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது...