×

கோவை தனியார் மருத்துவமனையில் வாலிபர் சரமாரி அடித்துக்கொலை: திருட வந்ததாக நினைத்து அறையில் அடைத்து சித்ரவதை: 8 பேர் கைது

கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் திருடன் என நினைத்து வாலிபரை அறையில் அடைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர். கோவை பீளமேடு தனியார் மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் பணிக்காக இரும்பு பைப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பைப்புகள் மற்றும் செம்பு கம்பிகள் அடிக்கடி திருட்டுப்போனது.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் 2 முறை இரும்பு பைப்புகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அடுத்த முறை வந்தால் அவரை பிடிக்க ஊழியர்கள் அடையாளம் பார்த்து வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதே வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார். அவரை காவலாளிகள் உட்பட சிலர் மடக்கி பிடித்தனர். பின்னர் அங்குள்ள அறையில் அடைத்து சித்ரவதை செய்து சரமாரியாக தாக்கினர்.

இதில் தலை, முகம், மார்பு, பிறப்புறுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயக்கமடைந்தார். அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அன்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சென்று விசாரித்தனர். இதில் இறந்தவர் கோவை காந்திமாநகரை சேர்ந்த ராஜா (எ) மணி (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜாவின் மனைவி சுகன்யா அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

மருத்துவமனையை சேர்ந்த 15 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், மருத்துவமனை நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சிலர் சேர்ந்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ராஜா உயிரிழந்ததும் உறுதியானது. இதனையடுத்து போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையின் துணை தலைவர் நாராயணன் (47), தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலாளர் ரமேஷ் (36), சரவண குமார் (34), பிஆர்ஓ சசிக்குமார் (37), பிளம்பர் சுரேஷ் (50), மற்றொரு சரவணகுமார் (34), காவலாளி மணிகண்டன் (36), ஸ்டோர் மேலாளர் சதீஷ்குமார் (42) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

 

The post கோவை தனியார் மருத்துவமனையில் வாலிபர் சரமாரி அடித்துக்கொலை: திருட வந்ததாக நினைத்து அறையில் அடைத்து சித்ரவதை: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!