×

கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில்45 மணி நேர தியானத்தை மோடி இன்று தொடங்குகிறார்


*11 எஸ்பி தலைமையில் 3,500 போலீஸ் பாதுகாப்பு
* கடற்படையினரும் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். இதையொட்டி அங்கு கடற்படையினர் மற்றும் 11 எஸ்பிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இதற்காக வாரணாசியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, நேற்று அங்கு தங்கினார். இன்று பிற்பகல் வாரணாசியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை ஹெலிபேடுக்கு மாலை 4.45 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து மோடி நேராக பகவதியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்கிறார்.

பின்னர் மாலை 5.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.30க்கு காரில் கன்னியாகுமரி படகுத்துறை வந்து சேருகிறார். அங்கிருந்து படகில் 5.40 மணிக்கு விவேகானந்தர் நினைவிடம் சென்றடைகிறார். மாலை 5.45 மணி முதல் அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார். இதனை முன்னிட்டு, தமிழக போலீசார் மட்டுமின்றி, மத்திய பாதுகாப்பு படையினரும் குமரிக்கு வந்துள்ளனர்.கடந்த இரு நாட்களாக தமிழக கடலோர பாதுகாப்பு ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில், தென் மண்டல ஐ.ஜி கண்ணன், டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி சுந்தரவதனம் மற்றும் கடற்படை, எஸ்.பி.ஜி அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு பிரிவுகள், கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஹெலிபேடில் 3 அடுக்கு பாதுகாப்பும், விவேகானந்தர் மண்டபத்தில் 4 அடுக்கு பாதுகாப்பும், கடற்கரை மற்றும் படகு தளம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக 48 மணி நேரம் பிரதமர் இங்கு தங்குவதால், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. 11 எஸ்.பிக்கள் மேற்பார்வையில், 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வெளிமாவட்ட போலீசாரும் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். கன்னியாகுமரி தங்கும் விடுதிகளில் போலீசார் சுற்றுலா பயணிகள் விவரங்களை பெற்று கண்காணித்து வருகின்றனர். கடற்கரைகளில் சாதாரண உடையிலும், போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுபோல், சின்னமுட்டம், கோவளம் போன்ற அருகில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால், தமிழக காவல்துறையினருக்கு இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு முதல் அனுபவமாக உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நேற்றே ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

களமிறங்கிய மார்கோஸ் வீரர்கள்
அமொிக்க கடற்படையில் சீல் என்ற கமாண்டோ படை பிரிவு உள்ளது. இதற்கு இணையாக இந்திய கடற்படையிலும், மார்கோஸ் எனப்படும் சிறப்பு கமாண்டோக்கள் (கடல் செயல் வீரர் படை) உள்ளனர். 1987ம் ஆண்டு இந்த பிரிவு தொடங்கப்பட்டது. மார்கோஸ் வீரர்கள், கடலுக்கு அடியில் 24 மணி நேரமும் இருந்து கண்காணிப்பது உள்பட அதிதீவிர பாதுகாப்பு பயிற்சி பெற்றவர்கள். கார்கில் உள்பட பல போர்களில் இந்த வீரர்கள் பங்களிப்பு அதிகம். ஸ்கூபா டைவிங், கடல் கொள்ளையர் கண்காணிப்பு, பணய கைதிகள் மீட்பு, உளவு, தேடல், பயங்கரவாத எதிர்ப்பு என பலவகையான பயிற்சி பெற்ற இவர்களிடம் நவீன பாதுகாப்பு உபகரணங்களும் உண்டு. குமரியில் பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு இந்த மார்கோஸ் படை வீரர்கள் 30 பேர் வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை முதல் அதிவேக படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போர்க்கப்பல்கள் வருகை
மோடி வருகையை முன்னிட்டு, கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக கடற்படையினர், ஒன்றிய துணை ராணுவ பிரிவான கடலோர காவல்படையினர், தமிழ்நாடு மரைன் போலீசார் ஆகியோர் கடலில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுவாகவே பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போது, அதன் அருகே உள்ள பகுதிகளில் கடலோர காவல் படையின் தீவிர கண்காணிப்புடன், போர்க் கப்பல்களும், அந்த கடல் பகுதிக்கு வந்து விடும். தற்போதும், போர்க்கப்பல்கள் குமரி கடல் பகுதிக்கு வந்துள்ளன. இதுபோல் ஹெலிகாப்டர்கள் மூலமும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் கண்காணிப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் சிலைக்குமரியாதை செலுத்துகிறார்
விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை முடித்ததும் பிரதமர் மோடி அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட்டிற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்கிறார்.

தியானத்தை குளிர்விக்க 2 டன் ஏசி, 3 சொகுசு அறை, புது கட்டில்
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது இறுதிகட்ட பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு சென்று பனிக்குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். பிரதமர் மோடிக்காக பல்வேறு சொகுசு வசதிகள் அங்கு செய்து தரப்பட்டது. இதேபோல், தற்போது விவேகானந்தர் மண்டபத்திலும் பிரதமர் மோடிக்காக 3 நவீன சொகுசு அறைகள் தயாராகி வருகிறது. அதில் ஒன்று பிரதமர் மோடியின் அலுவலகமாகவும், ஒன்று ஓய்வு எடுக்கவும், மற்றொன்று சமையல் கூடமாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான உணவு அங்கேயே தயாரித்து வழங்கப்பட இருக்கிறது. இதற்காக சமையல்காரரும் நியமிக்கப்படுகிறார். அங்குள்ள தியான கூடமும் தியானம் செய்வதற்கு வசதியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தியானத்தை குளிர்விக்க அறையில் புதிதாக 2 டன் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் இருக்கும் மண்டபத்தில் எப்போதுமே சில்லாக தான் இருக்கும். ஆனாலும், மோடிக்காக புதிதாக ஏசிக்கள் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று இரண்டு கட்டில்களும் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு
பிரதமர் மோடி தியானத்தின் போது, சுற்றுலா பயணிகள், கடை வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கலெக்டர் தலைமையில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தியானம் செய்யும் 3 நாட்களிலும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாதம் வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பைகள் கொண்டு செல்ல அனுமதியில்லை. சுற்றுலா பயணிகள், ஆதார் அல்லது அடையாள அட்டையை காண்பித்து, பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மோடி தரிசனம் செய்ய உள்ள பகவதி அம்மன் கோயிலிலும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில்45 மணி நேர தியானத்தை மோடி இன்று தொடங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Vivekananda Hall ,Kanyakumari Sea ,Nagargo ,PM ,Kanyakumari Vivekananda Hall ,
× RELATED குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்