×

பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்த ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 7 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கம் மற்றும் டெரிவேட்டிவ் வர்த்தகம் செய்வதாகவும் கூறி அதற்கான ஆவணங்களை காட்டி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100% லாபத்தொகையை வருடா வருடம் கொடுத்து 3 வருடம் முடிந்த பின் முதலீடு செய்த முழுத்தொகையை கொடுத்து விடுவதாக ஸ்வர்ணதாரா குழும நிறுவனமானது கூறியது.

இதனை நம்பி கடந்த 2015-ம் வருடம் ராஜகோபால் என்பவரும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 61 பேர் இந்த நிறுவனத்தில் ரூ.2.40 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். அதே போன்று சுப்பையா என்பவரும் அவருடன் சேர்த்து 25 நபர்களும் நிறுவனத்தில் ரூ.1.49 கோடி வரை பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள் சொன்னபடி முதலீட்டு பணத்திற்கு லாபத்தை தராமலும் முதலீட்டு தொகையை திருப்பி தராமலும் ஏமாற்றிவிட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இவர்களை தவிர மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த நிறுவனத்தில் பல கோடி வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று சென்ைன, நொளம்பூர் பகுதியை சேர்ந்த ஸ்வர்ணதாரா நிறுவனத்தின் சேர்மன் வெங்கடரங்க குப்தா (58) மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களான ஹரிஹரன் (58), விஜயஸ்ரீ குப்தா (54), கவிதா சக்தி (49), பிரதிஷாகுப்தா (29), ஜெயசந்தோஷ் (25), ஜெயவிக்னேஷ் (25) ஆகிய 7 பேரை கொரட்டூர் மற்றும் நொளம்பூர் ஆகிய பகுதிகளில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களை சோதனை செய்த போது சோதனையில் ரூ.4.50 லட்சம், 44 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், 2 சொகுசு கார்கள், 2 லேப்டாப், 14 செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்த ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் 7 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Swarnadara Group ,CHENNAI ,America ,Australia ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி...