×

முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபின் விளையாட்டுத் துறைக்கு, கடந்த 3 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகள பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்பு பணிகள் அனைத்தும் ரூ.60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் ரூ.30 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உலக தரத்திலான விளையாட்டு நகரம்: சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திட திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.87.61 கோடி: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுவரையில் எந்த அரசும் வழங்கிடாத வகையில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.87 கோடியே 61 லட்சம் வழங்கி சிறப்பித்துள்ளார்.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022: தமிழ்நாடு அரசும், இந்திய சதுரங்க கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ ரூ.114 கோடி செலவில், 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டியினை மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளை சார்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டு அரசின் விருந்தோம்பலை கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.

இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் என புகழ்க்கொடி நாட்டியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு “Man of the Year” என்கின்ற விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022: முதல்வரால் டென்னிஸ் சங்கத்திற்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியுதவியுடன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி: 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் தலா ரூ.1 கோடி செலவில், ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023: முதல்வரின் சீரிய முயற்சியால் இப்போட்டியை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு வழங்கிய ரூ.2 கோடி நிதியுதவியால் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்குவாஷ் உலக கோப்பை-2023 சென்னையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சதுரங்க அறக்கட்டளையும் இணைந்து தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் வழங்கிய ரூ.2 கோடி செலவில் 8 நாடுகள் பங்கேற்ற சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023 போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷி போட்டி-2023: அரசு சார்பில் வழங்கிய ரூ.17.33 கோடி நிதியுதவியால், 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியானது ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச அலை சறுக்கு போட்டி-2023: உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலை சறுக்கு போட்டி-2023 ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் சிறப்புடன் நடத்தப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2023: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சார்ந்த 5,600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மிகவும் சிறப்புடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

முதலமைச்சர் கோப்பை-2023: 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை, ரூ.52 கோடி செலவில் கடந்த 2023ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்னையில் 17 இடங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 27 ஆயிரத்து 554 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக சர்வதேச அலை சறுக்கு போட்டி, அண்ணா மாராத்தான் போட்டி, ஹெசிஎல் சைக்கோளத்தான், அண்ணா மிதிவண்டி போட்டி உள்ளிட்ட போட்டிகளும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13 வீரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரூ.86 கோடி செலவில் முதற்கட்டமாக, 420 கிராம பஞ்சாயத்துகளுக்கு 546 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்: இப்பல்கலைக்கழகத்தில் 24 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தங்கும் விடுதி, உணவுக்கூடம், ஆசிரியர் குடியிருப்பு, மொழி ஆய்வகம், கற்பித்தல் ஆய்வுக்கூடம், விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகள் ரூ.30 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம்: தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை தாஜ்கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில், இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரநிதிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu ,India ,Chennai ,M.K. ,Tamil Nadu government ,Stalin ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து