×

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது. மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கோரியது சர்ச்சையான நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை 5 தென்மாவட்ட மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு பல்வேறு கருத்துக்களை எழுப்பி வந்த நிலையில் 2014ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடைப்படையில் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது எனவும் பேபி அணை பகுதியை பலப்படுத்தி அணையின் நீரைமட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் அணையை கண்காணிப்பதற்காக 2(மூவர் குழு, ஐவர் குழு) குழுக்களையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூவர் குழுவில் தொழில்நுட்ப வல்லுனர்களையும் இணைக்கப்பட்டது. இக்குழு அணையின் பருவகால சூழலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி ஆய்வு குழு அணையை ஆய்வு செய்யவிருந்தது. இதனிடையே தேர்தல் காரணமாக ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 13, 14ல் ஆய்வு குழு முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளது. கேரள அரசு தரப்பில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் அடுத்த மாதம் ஆய்வு குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Central Monitoring Committee ,Mullai-Periyaru ,Tamil Nadu Water Department ,Chennai ,Mullai-Periyaru Dam ,central water resources ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல்...