×

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக, அவரது உடல் கிடந்த தோட்டம் அருகேயுள்ள ஜெபக்கூடத்தில் தங்கியிருந்தவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 4ம்தேதி கரைச்சுத்துபுதூரில் அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உறவினர் உள்ளிட்ட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் தினமும் 2 பேரிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதை வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

இதற்கிடையே ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்ட அவரது தோட்டத்தின் அருகே ஒரு ஜெபக்கூடம் உள்ளது. இங்கு பிரார்த்தனை நடக்கும் நேரங்களில் ஊழியங்களில் ஈடுபடுபவர்கள் தங்கி செல்வது வழக்கம். இதனால் கடந்த 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் அங்கு தங்கியவர்கள் விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏதாவது துப்பு துலங்குமா என போலீசார் கருதுகின்றனர். கரைசுத்துபுதூரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையில் ஈடுபடுகின்றனர். மேலும் வழக்கின் போக்கினை சிபிசிஐடி ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: ஜெபக்கூடத்தில் தங்கியவர்களிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Nella Congress ,Jayakumar ,CBCID ,Nella ,Nella East District Congress ,President ,Karaichutputur ,Nellu Congress ,
× RELATED ஜெயக்குமார் மரண வழக்கு: ஏடிஜிபி, ஐஜி நேரில் விசாரிக்க முடிவு