×

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி

வல்லம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செய்த மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே சோழ நாடு சோறுடைத்து என்று தான் கூறுவார்கள். குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து சாகுபடி பணிகள் நடக்கும் பூமிதான் தஞ்சை பூமி. கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் கோடை உழவை அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை.காரணம் வயலை காற்றாடப் போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் நேரடியாக கிடைக்கும். ஜூன் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும்.

அப்போது வயல்களில் ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.இதற்கு ஆட்டு கிடை போடுவது என்று பெயர். இயற்கையான முறையில் மண் சத்து தரம் உயரும். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கொளுத்தி எடுத்ததால் வயல்வெளிகளில் புல், பூண்டுகள் கருகி போய் கிடந்தன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆட்டுக்கிடை போட்டவர்கள் தவித்தனர். ஆடுகளுக்கும் இரை கிடைக்காமல் அவதியடைந்து வந்தது.ஆடுகளை வெகுதூரத்திற்கு அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விடும் நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை,கறம்பை உள்பட பகுதிகளில் தற்போது வயல்களில் புற்கள் நன்கு வளர்ந்து வருகிறது. இதனால் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகளுக்கு தாராளமாக உணவு கிடைக்கிறது. இதனால் வெகுதூரம் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டியதில்லை. இதனால் இரவு நேரத்தில் சீக்கிரமே பட்டியில் அடைத்து விடுகின்றனர் பட்டியில் அடைப்பதில் ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும்.

இப்படிக் கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள் சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கிவிடுவது வழக்கம்.
தற்போது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா என்ற நிலை உள்ளதால் இன்னும் ஒருமாதம் வரை ஆட்டுக்கிடை போடுபவர்கள் தங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Vallam ,Kurvai ,Samba ,Thaladi ,Uludu ,Dinakaran ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை...