×

25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு

*கல்வி கட்டணம் கேட்டதால் பெற்றோர் அதிர்ச்சி

கோவை : தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பில் கல்வி வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டன. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 324 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 15 ஆயிரத்து 347 இடங்கள் உள்ளது.

இதில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி 3 ஆயிரத்து 873 இடங்கள் இருந்தது. இதற்கு சுமார் 8,250 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர்.இவற்றில் இரட்டை பதிவு, உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதது உள்ளிட்ட தகுதியற்ற விண்ணப்பங்கள் நிரகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு இடம் ஒதுக்கீடும் செய்யும் பணிகள் நடந்தது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்த பெற்றோருக்கு பள்ளியின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் அந்த பள்ளிகளில் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய் கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் தேர்வு நேற்று நடந்தது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களைவிட அதிகளவில் விண்ணப்பங்கள் இருந்தது. இதனால், அந்த பள்ளிகளில் பெற்றோரின் முன்பு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நடத்தப்பட்டன. அப்போது, பள்ளி சார்பில் பெற்றோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அதாவது, நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் அப்ளிகேஷன் கட்டணம், பள்ளியில் 3 பருவத்திற்கான கட்டணம், சீருடை கட்டணம், புத்தகத்திற்கான கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் பெற்றோர் பலர் அதிர்ச்சி அடைந்தனர். சில பள்ளிகள் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்த கட்டண விவரத்தை கேட்டு சிலர் இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்தும் சேரவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், ‘‘25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு டியூஷன் கட்டணம் மட்டுமே அரசின் மூலம் செலுத்தப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம், சீருடை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட கட்டணத்தை பெற்றோர்தான் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், கல்வி கட்டணம் என்பது முழுவதுமாக இலவசம் இல்லை. பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். தற்போது 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள பெற்றோர்களிடம் இருந்து கட்டணம் தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளது. அது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,LKG ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்