×

அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக்

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

ஊட்டி : அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டியில் நடந்த திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி காக்காதோப்பு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

வழக்கறிஞர் விஜயன் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து செயலாளர் செந்தில்குமார் பேசினார். சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் தொடர்புடைய தீர்ப்புகள் குறித்து பந்தலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சிவக்குமார் பேசினார். நீலகிரியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ் பேசியதாவது:

பிளாஸ்டிக் வரவால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. நீரும் நிறம் மாறி நிலத்திற்கு விஷமாகிறது. அடுத்து வரும் தலைமுறை நிம்மதியாக வாழ பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனை அரசு நினைத்தால் நிறுத்த முடியாது. 1812ல் அறிமுகமான பிளாஸ்டிக் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை ஆட்டிபடைத்து வருகிறது. அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக். விஷத்ைத விட வீரியமானது பிளாஸ்டிக். ஏனென்றால் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் கவரில் உணவு, தின்பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கின் நுண்துகள்கள் உடலுக்குள் சென்று உடல்நலனை பாதிக்கிறது.

ஆனால், இதுகுறித்து அறியாமல் நாம் தொடர்ந்து சூடான டீ, சாம்பார் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி சென்று சாப்பிடுகிறோம். இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டேன் என உறுதி ஏற்று அதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழலை காக்க முடியும்.

பிளாஸ்டிக் ஒழிப்பை இளம் தலைமுறையினரிடம் அவர்களின் பள்ளி கல்வியில் இருந்து கொண்டு வர வேண்டும். நாம் ஒவ்வொரு மனிதனும் மனது வைத்தால் தான் பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி என்ற நிலையை எட்ட முடியும். திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து அகற்ற வேண்டும். காய்கறி கழிவுகள், தோட்ட கழிவுகள், முட்டை ஓடுகள், மீதமாகும் கெட்டுப் போன உணவு பொருட்கள், காய்ந்த மலர்கள், சமையலறை கழிவுகள், பழந்தோல், வாழை இலைகள், பயன்படுத்திய தேயிலை தூள் உள்ளிட்டவைகள் மக்கும் குப்பைகளாகும்.

பால்கவர், எண்ணைய் கவர் போன்ற அனைத்து வகை பாலித்தீன் கவர்கள், கண்ணாடி பொருட்கள், இரும்பு பொருட்கள், அலுமினிய ெபாருட்கள், பழைய காலனிகள், தண்ணீர் பாட்டில்கள், தோல் பொருட்கள் போன்றவை மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களாகும். எனவே மக்களாகிய நாம் மக்கும் மக்காத குப்பைகளை பிரித்து தர முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அணு ஆயுதத்தை விட ஆபத்தானது பிளாஸ்டிக் appeared first on Dinakaran.

Tags : Legal Affairs Commission ,Nilgiri District Legal Affairs Commission ,Dinakaran ,
× RELATED காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு...