×

வேலூர் சதுப்பேரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் காலாவதியான மருந்துகள், மருத்துவக்கழிவுகள் வீச்சு

*தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

வேலூர் : வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் காலாவதியான மருந்து, மாத்திரைகள், ஊசி உட்பட மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேல்மொணவூர் சதுப்பேரி ஏரிக்கரை அருகே சர்வீஸ் சாலையில் நேற்று காலை சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏரிக்கரையில் ஆங்காங்கே மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்துகளும், காலி மருந்து குப்பிகளும், பாட்டில்களும் என மருத்துவக்கழிவுகள் வீசப்பட்டிருந்தன. இதேபோல் நேற்று முன்தினம் செதுவாலை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீசப்பட்டிருந்தன.

அடிக்கடி இவ்வாறு வீசப்படும் மருத்துவக்கழிவுகளை அறியாமல் அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், குழந்தைகள் எடுத்து விளையாடினால் ஏற்படும் விபரீதங்களை அறிந்தும், சாலையோரம் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மருத்துவக்கழிவு குப்பைகளை கிளறி அதன் மூலம் நோய்த்தொற்று கிருமிகள் கால்நடைகளை மட்டுமின்றி அதன் உரிமையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும் இதுபோன்ற அடாத செயலில் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருந்து கடைகள் ஈடுபடுவதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகள் ஆகியவற்றில் சேரும் நோய்தொற்று அபாயம் கொண்ட மருத்துவக்கழிவுகளும், காலாவதியான மருந்து மாத்திரைகளும், மருத்துவக்கழிவு மேலாண்மை மூலம் பாதுகாப்புடன் அகற்றி, அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அதேநேரத்தில் மருந்து மொத்த வியாபார நிறுவனங்கள், சில்லரை மருந்து கடைகளில் காலாவதியாகும் மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தாலேயே திரும்ப பெறப்பட்டு அழிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகளில் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றி அழிக்கும் பணிக்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு காட்பாடி விண்ணம்பள்ளியில் இயங்கி வரும் ெகன் பயோ லிங்க் நிறுவனம் அமர்த்தப்பட்டது. இவை மருத்துவக்கழிவுகளின் தன்மை மற்றும் எடைக்கேற்ப கட்டணத்தை பெற்று மருத்துவக்கழிவுகளை கையாள்கிறது.

ஆனால் இத்திட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒரு சில பிரபல தனியார் மருத்துவமனைகளே ஆர்வம் காட்டி வருகின்றன. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், டாக்டர்கள் நடத்தி வரும் கிளினிக்குகள், மொத்த மருந்து வணிக நிறுவனங்கள், சில்லரை மருந்துக்கடைகள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டாமல், அப்படியே தங்களின் மருத்துவக்கழிவுகளை இரவு நேரங்களில் நீர்நிலைகளிலும், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலையோரங்களிலும் சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக வீசி செல்கின்றன.

இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பும் வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை சதுப்பேரி கரையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ கழிவுகள் தொடர்பாக தினகரனில் செய்தியாக வெளிவந்து அவற்றை மாநகராட்சியும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் அகற்றின. இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற அடாத செயலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் எது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவக்கழிவுகள் வகை

மஞ்சள் கழிவுகள்

மனிதனின் திசுக்கள், உடல் பாகங்கள், ரத்தம் தோய்ந்த பாகங்கள், ரத்தம், ஆய்வகங்களில் தேங்கும் கழிவுகள், மாதிரிகள்.

சிகப்பு கழிவுகள்

ஊசி அகற்றப்பட்ட பிளாஸ்டிக் சிரிஞ்சுகள், பிளாஸ்டிக் ரத்தம் செலுத் தும் டியூப்கள், இன்ட்ராவினஸ் செட்கள், பிளாஸ்டிக் ஐ.வி செட்கள்.

புளூ கழிவுகள்

அறுவை சிகிச்சையில் உபயோகித்த முகம் மற்றும் தலைக்கவசங்கள், கையுறைகள், ரத்தம் தோய்ந்த ரப்பர் விரிப்புகள், ஆடை வகைகள், மருந்து கண்ணாடி குப்பிகள்.

உலோக மருத்துவ கழிவுகள்

உபயோகித்த ஊசிகள், கத்திகள், பிளேடுகள், கூர்மையான பொருட்கள், பிஸ்ட்டியூலா ஊசிகள்.

The post வேலூர் சதுப்பேரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் காலாவதியான மருந்துகள், மருத்துவக்கழிவுகள் வீச்சு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Vellore Chathuperi ,Vellore ,Chennai-Bengaluru National Highway ,Melmonavur Chaduperi Lake ,
× RELATED டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு