×

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: தேர்தல் விதிமுறை அமலில் இருந்த பொழுது தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றினார். கடந்த 26ம் தேதி மாற்றி உத்தரவிட்டார். ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவிநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் , நைனார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக நைனார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayinar Nagendran ,Chennai ,Thambaram ,station ,Brass Police Assistant Commissioner ,Nelson ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயத்தால் உயிர்பலி ஏற்படாமல்...