ஈரோடு, மே 29: ஈரோடு காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறும், பவானி ஆறும் உள்ளது. இதில், காவிரி ஆற்றில் கடந்த மாதம் போதிய நீர் வரத்து இல்லாததால் தண்ணீர் குறைந்து, பாறைகளாக காட்சியளித்தது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இந்த தண்ணீர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பிபெ அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை கடந்து ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணையில் தடுக்கப்பட்டு, தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு காவிரி ஆற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆகாய தாமரைகள் நீரை விரைவாக உறிஞ்சி ஆவியாக்கி விடும். எனவே, காவிரி ஆற்றில் ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.