×

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப் பண்டங்களைக் கொள்முதல் செய்ய காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் கடந்த 27ம் தேதியன்று 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும், 8,11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Commissioner ,Food Supply ,Consumer Protection Department ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...