×

அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ஊழல்: 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி வரை ஊழல் செய்தது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்தமாக வீடு கட்ட முடியாதவர்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 290 ரொக்கம் ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொகையில் 62 சதவீதம் மாநில அரசும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசும் வழங்குகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு சேர வேண்டிய பல கோடி பணத்தை துறையை சேர்ந்த அதிகாரிகள் மோசடி செய்யப்பட்டுள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் சுமார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மே 20ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூர் கிராமத்தில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி வீடுகள் கட்டியதாக கணக்குகள் காட்டி ரூ.31.66 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ள பயனாளிகள் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவர்கள்.

ஆனால் அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதாகவும், வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் முழுவதும் கட்டி முடித்ததாக கூறி லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளனர். அதைப்போன்று நாகப்பட்டிணத்தில் கடந்த மார்ச் மாதம் 146 பயனாளிக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.1 கோடி முறைகேடு செய்ததாக கூறி 10 அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதைப்போன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ள பயனாளிகள் பெரும்பாலானோர் பணம் பெறத் தகுதியற்றவர்கள். பலர் அதிகாரிகள் துணையுடன் வீடுகள் முழுவதும் கட்டி முடிக்காத நிலையில் பணி முடிந்ததாக போலி ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்றுள்ளனர். மேலும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

The post அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ஊழல்: 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : PM ,AIADMK ,Chennai ,Rural Development and Panchayat Raj Department ,Tamil Nadu ,Anti-Corruption Bureau ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...