நாகர்கோவில்: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். சிறப்பு படகு மூலம் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் பிரதமர், மாலை முதல் தியான மண்டபத்தில் அமர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட உள்ளார். 1ம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன. 7வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை (30ம் தேதி) மாலையுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை நிறைவடையும் நிலையில் தியானம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 30ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருகிறார். மாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். பின்னர் மாலை 5.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.30க்கு காரில் கன்னியாகுமரி படக்குத்துறை வந்து சேருகிறார். அங்கிருந்து படகில் 5.40 மணிக்கு விவேகானந்தர் நினைவிடம் சென்றடைகிறார். மாலை 5.45 மணி முதல் அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து இரவு பகலாக மே 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) முழுவதும் தியானத்தில் இருக்கிறார். ஜூன் 1ம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு அவர் விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்து புறப்படுகிறார். 3.10க்கு படகுத்துறையில் இருந்து புறப்பட்டு 5.20 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேடு செல்கிறார். அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடத்தில் 45 மணி நேரம் 25 நிமிடங்கள் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது இறுதி கட்ட பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரம் கொண்ட கேதார்நாத் கோயிலுக்கு சென்று பனிக்குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். அதனை போன்று இந்த முறை அவர் கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார்.
பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கன்னியாகுமரி வந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எஸ்.பி. சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேந்திரா அலுவலக பொறுப்பாளர்களுடன் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆலோசனை நடத்தினார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நேற்று காலை முதல் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மோப்ப நாய் சோதனை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையும் நடந்தது. சோதனைக்குப்பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நாளை (30ம்தேதி) முதல் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிகிறது.
பிரதமர் வர இருப்பதால் டெல்லியில் இருந்து பாதுகாப்பு படையினர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் சோதனையை தொடங்கினர். நாளை (30ம் தேதி), 31, 1ம் தேதிகளில் யார் யார் லாட்ஜுகளில் தங்குவதற்காக புக்கிங் செய்து உள்ளனர். ஆன்லைன் புக்கிங் செய்தவர்கள் யார்?, போனில் புக்கிங் செய்தவர்கள் யார்? என்பது தொடர்பான பட்டியலை பெற்றுள்ளனர். இவர்களின் முகவரிகள், செல்போன் நம்பர்கள் வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். லாட்ஜ்களில் தங்கி இருந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.
The post 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை விவேகானந்தர் மண்டபத்தில் மோடி 45 மணி நேரம் தியானம்: நாளை மாலை தொடங்குகிறார் appeared first on Dinakaran.