×

தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தேவாலய சொத்துக்களையும் பதிவு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. வகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விஜயா என்பவரிடமிருந்து 2023ல் சொத்து வாங்கினேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார்பதிவாளர் மறுத்து விட்டார். பதிவு செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்து, பத்திரப்பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். சார்பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘‘டிஇஎல்சி தொடர்பான சொத்துக்களை உயர்நீதிமன்ற அனுமதியின்றி பத்திரப்பதிவு செய்யக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மனுதாரர் வாங்கிய சொத்தும் ஏற்கனவே டிஇஎல்சி தொடர்புடையதாக பதிவு செய்துள்ளனர். எனவேதான் மனுதாரர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’’ என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துக்களை அறநிலையத்துறை மற்றும் வக்பு பதிவு சட்டம் பாதுகாக்கிறது. இதில் தேவாலய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. கிறிஸ்துவ ஆலய சொத்துக்களை பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. ஐகோர்ட்டில் டிஇஎல்சி சொத்து தொடர்பான பிரதான வழக்கு, பதிவுத்துறை ஐஜியின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி திரும்ப பெறப்பட்டுள்ளது.

பிரதான மனு நிலுவையில் இல்லாதபோது இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை. பதிவுத்துறை ஐஜியின் சுற்றறிக்கை சட்டப்படியான உத்தரவும் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் டிஇஎல்சி சொத்துக்களை பொறுத்தவரை தற்போது எந்த தடையும் இல்லை. தேவாலய சொத்துக்கள் பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத நிலையில் அந்த சொத்துக்களை பதிவு செய்ய மறுப்பது சரியல்ல. எனவே, சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்’’ என உத்தரவிட்டுள்ளார்.

 

The post தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,ICourt branch ,Shalin ,Tiruppathur, Waganai district ,Court of Appeal ,Vijaya ,ICourt branch opinion ,Dinakaran ,
× RELATED தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு