×

கேரளாவில் பலத்த மழை: படகு கவிழ்ந்து மீனவர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் அருகே மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து ஒரு மீனவர் பரிதாபமாக இறந்தார். கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. கடந்த 2 தினங்களாக மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம் கொல்லம், கோட்டயம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. எர்ணாகுளத்தில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கொச்சியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவான இன்போ பார்க்கில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே முதலப்பொழி கடல் பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் நான்கு மீனவர்கள் இருந்தனர். படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலுக்குள் விழுந்தனர். இது குறித்து அறிந்த அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பயனின்றி ஆபிரகாம் என்ற மீனவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் பலத்த மழை: படகு கவிழ்ந்து மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Ernakulam ,Kollam ,Kottayam ,
× RELATED எர்ணாகுளம் அருகே ரயிலில் கடத்தி வந்த...