×

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல், கெஜ்ரிவாலை புகழ்ந்தது ‘வெரி சீரியஸ் மேட்டர்’: விசாரணை நடத்த பிரதமர் மோடி கோரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல், கெஜ்ரிவாலை புகழ்ந்தது ‘வெரி சீரியஸ் மேட்டர்‘ என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மதவாதம், வகுப்பு வாதம், ஜாதி அரசியல், பாகிஸ்தான், சீனா போன்ற விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் தலைவர் ஒருவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆதரித்து பேசுகிறார். ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அங்கிருந்து (பாகிஸ்தான்) ஆதரவு குரல்கள் வருகின்றன. இவ்விசயத்தில் விசாரணை தேவைப்படுகிறது. இது மிகவும் தீவிரமான விஷயமாகும். எனக்கு இருக்கும் பிரதமர் என்ற பதவியின் காரணமாக, இந்த பிரச்னை குறித்து மேலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்பிரச்னையில் இருக்கும் கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது. உலகத்திற்கே முன் உதாரணமாக இருக்கிறது. இந்திய ஜனநாயகம் மிகவும் முதிர்ச்சியடைந்தது; பாரம்பரிய மரபுகளைக் கொண்டுள்ளது. இந்திய வாக்காளர்கள் வெளியில் இருந்து வரும் கருத்துகளை பார்த்து வாக்களிப்பவர்கள் அல்ல’ என்று கூறினார். முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் வரவேற்றார். மேலும் ‘மோடி மற்றொரு போரில் தோற்றார்; மிதவாத இந்தியாவுக்கு இது நல்ல செய்தி’ என்று பாராட்டினார். அதற்கு முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘நேரு போன்ற சோசலிஸ்ட் தலைவராக வயநாடு எம்பி ராகுல் காந்தி பணியாற்றுகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல், கெஜ்ரிவாலை புகழ்ந்தது ‘வெரி சீரியஸ் மேட்டர்’: விசாரணை நடத்த பிரதமர் மோடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rahul ,Pakistan ,Kejriwal ,PM Modi ,New Delhi ,minister ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...