×

வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!

வேங்கடாத்ரி

திருமலைக்கு பல திருநாமங்கள் உண்டு. வேங்கடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்திரி. இந்தப் பெயர்கள் ஒவ்வொரு யுகத்திலும் நடந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாக அமைந்த பெயர்கள். திருமலைக்கு வேங்கடாத்ரி என்று பெயர் எப்படி அமைந்தது? அதன் பொருள் என்ன?‘‘வேங்கடம் ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்பது ஆழ்வார் பாசுரம். இது மூன்று சொற்கள் கூடியது. வேம் + கடம் + அத்ரி = வேங்கடாத்ரி. கடம் என்றால் வினைகள், பாவங்கள். வேம் என்றால் எரிக்கக் கூடியது. வினைகளை. பாவங்களை எரிக்கக்கூடிய சக்திவாய்ந்த மலை, வேங்கடாத்ரி. (அத்ரி என்றால் மலை).

பலப்பல பெயர்கள்

திருமலைக்கு பலப்பல பெயர்கள் உண்டு. பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றுவார் என்பதால் “சிகாமணி” என்று பெயர். ஞானத்தை அளிப்பார் என்பதால் “ஞானாத்திரி’’ என்று பெயர். சகல புண்ணிய தீர்த்தங்களும், இத்திருத்தலத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பதால் “தீர்த்தநாத்திரி” என்று பெயர். தங்க மயமாக சிகரங்கள் இருப்பதால், “கனகாத்திரி’’ என்று பெயர். ஒரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுக்க பகவான் அவதரித்ததால் “நரசிம்மாத்திரி’’ என்று பெயர். வைகுண்டத்தில் இருந்து திருமலை இங்கே வந்து இருப்பதால், “வைகுண்டாத்திரி’’ என்றும் பெயருண்டு. அகலகில்லேன் இறையுமென்று, மகாலட்சுமி தாயார், மாலவன் மார்பில் ஒரு நொடியும் பிரியாமல் உறைவதால், திருமகள் வாழும் இதயத்தை கொண்ட பகவான் அருள்புரியும் இடம் என்ற பொருளில், “ஸ்ரீ நிவாசம்” என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

பலரும் வழிபட்ட தலம்

பலராமன், பிரம்மன், இந்திரன், வாயு பகவான், மார்க்கண்டேயன், அகத்தியர், கௌதமர், சனகாதி முனிவர்கள், பாண்டவர்கள், என பலரும் வழிபட்ட தலம் இது. குமரக்கடவுள், தாரகாசுரன் என்ற அசுரனை கொன்றுவிட்டு, இங்கே வந்து சுவாமி புஷ்கரணிக் கரையில் நீராடி, வராக பெருமானை வழிபட்டதாகவும் தல புராணம் கூறுகிறது. மகரிஷிகளும், சங்கன் முதலிய மன்னர்களும், தொண்டைமான் முதலிய சக்ரவர்த்திகளும் இத்தலத்தை வழிபட்டு இருக்கின்றனர்.

புண்ணிய தீர்த்தங்கள்

தலம் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் புகழ் பெற வேண்டும். இதிலே தீர்த்தம் என்பது மிகவும் முக்கியமானது. அத்தலத்தின் சாந்நித்தியமே அங்குள்ள தீர்த்தங்களால்தான். பெரும்பாலான புனித தேசங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருக்கும். ஆனால், திருமலையைச் சுற்றி இருக்கக் கூடிய தீர்த்தங்கள் ஏராளமானவை. கிட்டத்தட்ட 180 புண்ணிய தீர்த்தங்கள் திருமலையில் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதிலே மிக முக்கியமானது. திருமலை கோயிலுக்கு அருகே இருக்கக் கூடிய சுவாமி புஷ்கரணி, வராக தீர்த்தம், ஆகாச கங்கை, பாபவிநாச தீர்த்தம், குமார தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கபில தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம்.

வாத்ஸல்யம்

“ஆச்சார்ய ஹிருதயம்” என்கின்ற நூல் ஒவ்வொரு வைணவ திருத்தலத்தின் குண விசேஷத்தை பிரதானமாகச் சொல்லுகின்றது. அதில், திருமலைக்கு சொல்லப்பட்ட குணம் “வாத்ஸல்ய குணம்”. வாத்சல்யம் என்கின்ற குணம், குற்றங்களைக் காணாமல் பக்தருக்கு அருள் புரிகின்ற குணம். கன்றின் அழுக்கை தாய்ப்பசுவானது தன்னுடைய நாவால் நக்கி சுத்தப்படுத்துகின்ற குணம் வாத்சல்யம். அதுபோல, இறைவன் ஒரு பக்தனின் குணங்களையும் ஏற்றுக் கொண்டு, தோஷங்களை பரிசுத்தப்படுத்தி ஏற்றுக் கொள்வான் என்பதால் திருமலையப்பனுக்கு வாத்சல்யம் மிகுதி என்று வைணவ ஆச்சாரியர்கள் முடிவு செய்தார்கள்.

எல்லாக் காலங்களிலும், எல்லா உயிர்களுக்கும், எல்லா விதமான உறவுமாய்க் கொண்டு, எல்லார்க்கும் உயிராய் இருக்கக்கூடிய அந்தர்யாமி குணம் இது. ஆழ்வார் பாசுரம் மிக அழகாக இதை வெளிப்படுத்துகிறது. “என்னிடத்தில் எந்த தகுதியும் இல்லாத பொழுதும், பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி அவன்” என்று இந்த வாத்சல்ய குணத்தைச் சொல்லுகின்றார். “நீசனேன் நிறை ஒன்றுமில்லேன் என் கண் பாசம் வைத்த பரம்சுடர் ஜோதி” என்று பாடுகிறார் நம்மாழ்வார். அதனால்தான் ஆயிரம் குற்றங்கள் செய்தாலும், அவன் மன்னித்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில், தாய்ப் பசுவை நோக்கி ஓடும் கன்றினைப் போல், அந்த தயாபரனை நோக்கி லட்சக் கணக்கான மக்கள் திரள்கிறார்கள்.

– ஜெயசெல்வி

The post வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்! appeared first on Dinakaran.

Tags : Venkatavan ,Venkatadri Tirumala ,Venkatatri ,Vrushatri ,Anjanatri ,Narayanatri ,Seshatri ,Tirumala ,Venkatadri ,Vengadam ,
× RELATED வேங்கடவனின் வெள்ளக்குளம் அண்ணன்!