×

மாதவன் போற்றும் மச்சபுரி

‘‘இம்மண்ணுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலைநிமிர்கின்றதோ, அப்போது நான் அவதாரம் எடுப்பேன்” என்கின்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அப்படி பரந்தாமனாகிய திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் பத்து. அவற்றுள் முதன்மையானது மச்ச அவதாரம். அதாவது மீன் அவதாரம். இந்த அவதாரத்தின் நிகழ்வுகள் பற்றிய உண்மைகளை விவரிப்பதே 18 புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம்.மச்ச புராணப்படி இரண்டு அற்புதங்களை நிகழ்த்துகின்றார் ஸ்ரீமன் நாராயணர். 1. சத்யவிரதன் மூலமாக பிரளயத்திலிருந்து உயிர்களைக் காத்தது, 2. பிரம்மனால் தவறவிடப்பட்ட வேதங்களை மீட்டது.

மச்ச அவதாரம்

ஸ்ரீஹரி மீது பேரன்பு கொண்டவன் சத்யவரதன் என்னும் மன்னன். தண்ணீரை மட்டுமே பருகி, ஸ்ரீ வேங்கடேசரை நினைத்து கடும் விரதம் இருந்தான். நீருக்கு உரிய நாராயணர், இம்மன்னன் மீது கருணை கொண்டு திருவருள் புரிந்திட திருவுளம் கொண்டார். சிறிய மீனாக ஆற்றில் நீந்தினார். அப்போது நித்திய கடன்களை முடித்திட ஆற்றுக்கு வந்த சத்யவரதன் தனது கைகளால் ஆற்று நீரை எடுத்தார். அதில் மீனுருவில் உலவினார் மத்ஸ்ய நாராயணர். தன்னை மீண்டும் நீரில் விடவேண்டாம் என்றும், அப்படிவிட்டால், பெரிய மீன்கள் தன்னைத் தின்றுவிடுமென்றும் கோரிக்கை வைத்தது. அந்த மீனை தனது கமண்டலத்தில் விட்டுக் கொண்டு அரண்மனைக்கு சென்றான் மன்னன். அதற்குள் அம்மீன் கமண்டலத்தையே நிறைத்துவிட்டது. அதன் வளர்ச்சியைக் கண்டு திகைத்த மன்னன், அதை பெரியதொரு பாத்திரத்தில் இட்டான். மீண்டும் பெரிதாக வளர்ந்தது. குளத்தில் விட்டான். குளமும் நிரம்பியது. தனது வீரர்கள் மூலமாக கடைசியாக கடலில் விட்டான். கடலும் போதவில்லை. கடலே காலளவு நீராகிப்போனது. அந்த அளவிற்குப் பெரிதானது அம்மீன்.

இது உலகத்தைக் காத்து ரட்சிக்கும் உலகளந்தானின் திருவிளையாடல்தான் என்கின்ற உண்மையை உணர்ந்தான் சத்யவரதன். அப்போது அங்கே அசரீரி ஒலித்தது. பிரளயத்தை எச்சரிக்கவே தான் மீனுருவில் வந்ததாக வாக்குரைத்தார் வாசுதேவர். ‘‘சத்யவிரதா…பிரளயம் ஏற்படப்போகிறது. அதில் உலகம் அழியும். அப்போது எல்லா உயிர்களையும் ஓர் பெரிய கப்பலில் ஏற்றி, கடலில் விட்டுவிடு. அக்கப்பலை நான் இந்த மீனாக தாங்கி உயிர்களைக் காப்பேன்’’ என்று அருள்மொழிந்தார். மன்னன் சத்யவிரதனும் அவ்விதமே செய்தான். அவ்வாறே பிரளயமும் வந்தது. மன்னனும் ஓர் பெரிய கப்பலில் மனிதர்களோடு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களையும் ஏற்றி நீரில் நகர்ந்தான். பிரளயப் பெருவெள்ளத்தில அக்கப்பல் மூழ்காதவாறு பரந்தாமனே மீனாய் இருந்து தாங்கினார். பிரளயம் முடிந்ததும், எல்லோரையும் நிலத்தில்விட்டு எல்லா உயிர்களையும் காத்தருளினார் ஏழுமலைவாசன்.

வேதங்களை மீட்டது பிரளயம் ஓய்ந்தது. மீண்டும் படைக்கும் கடமையை ஆரம்பித்தார் பிரம்மா. அப்போது சோர்வு மிகுதியால் சற்றே கண்ணுறங்கினார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கோமுகாசுரன் என்னும் அசுரன், படைப்பிற்கு மூலாதாரமான நான்கு வேதங்களைக் கவர்ந்து கடலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் முடங்கியது. உலகமும் ஓய ஆரம்பித்தது. பயந்த பிரம்மா திருமாலை சரணடைந்தார். அப்போது மச்சமூர்த்தியாய் கடலூர் வசித்த ஸ்ரீ ஹரி, கோமுகாசுரனை அழித்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைக்கின்றார். காக்கும் கடவுளுக்கு நன்றி கூறிய பிரம்மன் மீண்டும் தனது படைப்புகளை திறம்பட படைக்கத் தொடங்கினார்.

ஆனால் நாராயணருக்கோ கோமுகாசூரனைக் கொண்ட தோஷம் சூழ்ந்தது. மீண்டும் பரமபதம் அடைய முடியாமல் தவித்தார். இதிலிருந்து விடுபட குடமுருட்டி ஆற்றின் தென்பால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மீனுருவில் வழிபட்டதால், இப்பதி மச்சபுரி என்றும், சேலூர் [சேல் = கெண்டை மீன்] என்றும் இருந்தது. தற்போது கோயில், தேவராயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. இப்பதி ஈசர் “ஸ்ரீ மச்சபுரீஸ்வரர்’’ என்று அழைக்கப் படுகின்றார்.முற்காலச் சோழ மரபினர்களுக்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டில் மீண்டும் தஞ்சையில் புலிக்கொடி ஏற்றி பறக்கவிட்ட வெற்றிச்சோழன் என்னும் விஜயாலய சோழனின் மகனான முதலாம் ஆதித்த சோழனே (கி.பி.871 – கி.பி.907) இங்கு மச்சபுரீசர் ஆலயத்தை செங்கத்தளியாக (செங்கல் கட்டுமானம்) நிர்மாணித்தான். பின்னர் முதலாம் ஆதித்த சோழனது மகனான முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி.907 – கி.பி.955) இக்கோயிலை கற்றளியாக (கல் கோயிலாக) மாற்றி அமைத்தான். அதோடு இவ்வூருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கந்தனது புகழை விவரித்துக் கூறும் கந்தர் சஷ்டிகவசத்தை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் பிறந்ததும் இந்த ஊரில்தான்.

முதல் வாயிலுள் நுழைகின்றோம். இங்கு இராஜகோபுரம் காணப்படவில்லை. மண்டபத்திற்குள் நுழையும் முன் புடைப்புச் சிற்பமாக மீன் பூஜிப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஸ்நபன மண்டபத்தில் தென் முகமாக ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை சந்நதியும் அமைந்துள்ளன. மூலஸ்தானத்தில் சிறிய திருமேனியராக காட்சி தந்தருள்கின்றார், ஸ்ரீ மச்சபுரீஸ்வரர். இவரது திருமுடி மீது மீன் பூஜிக்கும் கவசம் சாற்றப்படுகின்றது. பொதுவான கோஷ்ட மூர்த்தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. மேற்குத் திருமாளிகை பத்தியில் தல கணபதி, ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர், வள்ளி – தெய்வானை உடனுறை ஸ்ரீ ஷண்முகர், ஸ்ரீதேவி – பூதேவி உடனுறை ஸ்ரீ வரதராஜர், ஐயப்பன், சரஸ்வதி, ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கஜலட்சுமி சந்நதிகள் வரிசையாக அமைந்துள்ளன. தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. தல தீர்த்தமாக மச்ச தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தில் சோழர்கால கல்வெட்டுகள் சுமார் 55 உள்ளன.

நான்கு கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். அனைத்து சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. மீன ராசிக்காரர்களுக்கு பரிகாரத்தலமாகத் திகழ்கின்றது. சுகந்தகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீ மச்சபுரீஸ்வரரை வணங்கி, வழிபட்டு, வினைகள் யாவும் களைந்திடுவோம். ஆலயத் தொடர்புக்கு: 9790116821.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள இவ்வூர், பாபநாசம் – தஞ்சாவூர் சாலையில் உள்ள பண்டாரவாடையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 

The post மாதவன் போற்றும் மச்சபுரி appeared first on Dinakaran.

Tags : Machapuri ,Madhavan ,Lord ,Krishna ,Thirumal ,
× RELATED திருவாலங்காடு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறிப்பு