×

ஆக.24, 25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: ஆக.24, 25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 -ம் தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் இன்று (28.05.2024) இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ம் ஆண்டில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்று,

அவர்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தலைமையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர், ஆணையர், உயர் அலுவலர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம்,

மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கும், முருகப்பெருமானை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் என்ற தனி இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களான தவத்திரு கௌமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், திரு.சுகி சிவம், திருமதி தேச மங்கையர்க்கரசி ஆகியோர் இன்று (28.05.2024) தொடங்கி வைத்தனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் வருகின்ற 15.07.2024 ஆம் தேதிக்குள்ளும் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் 20.06.2024 ம் தேதிக்குள்ளும் மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தனி அலுவலர் (ஆலய நிலங்கள்) சு. ஜானகி, இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆக.24, 25-ல் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : International Muttamil Murugan Conference ,Palani ,Hindu Ministry ,Chennai ,Hindu Foundation Department ,International Kissing Festival ,Dindigul District ,Hindu Foundation ,Dinakaran ,
× RELATED அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு:...