×

பலாப்பழ சீசன் துவங்கியதால் மலைப்பகுதிக்கு படையெடுக்கும் காட்டு யானைகள் கூட்டம்

கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதியில் சாலையோர தேயிலை தோட்டம், வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு உலா வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பகுதி நோக்கி படையெடுக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் முள்ளூர்,மாமரம், குஞ்சப்பனை, கோழிக்கரை, தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் அதிக அளவில் பலாப்பழம் விளைந்துள்ளன.இவற்றை சாப்பிடுவதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இவை சில நேரங்களில் சாலை, குடியிருப்பு பகுதிகள்,தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது.இந்நிலையில் பகல் நேரத்தில் ஒற்றை காட்டு யானை சாலையோரம் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்தது.இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு மற்றும் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே வனத்துறையினர் இதுபோன்று உலா வரும் யானைக் கூட்டத்தை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

The post பலாப்பழ சீசன் துவங்கியதால் மலைப்பகுதிக்கு படையெடுக்கும் காட்டு யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Mettupalayam ,Mallur ,Mamaram ,Nilgiris ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...