×

மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை.! பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு

டெல்லி: மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன்களை பயன்படுத்தி இணைய குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இணைய குற்றங்களில் ஈடுபடும் நோக்கத்தில், பொதுமக்களின் செல்போன்களுக்கு மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம், தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவித்தது. 8 குறுஞ்செய்தி தலைப்புகளில் இவை அனுப்பப்படுவதாக கூறியது. அதன் அடிப்படையில், தொலைத்தொடர்பு துறை ஆய்வு நடத்தியது. அதில், கடந்த 3 மாதங்களில் மேற்கண்ட 8 குறுஞ்செய்தி தலைப்புகள் மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு இருப்பதாக கண்டறிந்தது.

அதைத்தொடர்ந்து, 8 குறுஞ்செய்தி தலைப்புகளை பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 73 குறுஞ்செய்தி தலைப்புகளும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதனால், இனிமேல் இந்த நிறுவனங்களால் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. மேற்கொண்டு யாரும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து ‘சஞ்சாய் சாதி’ இணையதளத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது. செல்போன் மூலம் வணிக நோக்கத்திலான குறுஞ்செய்திகளை அனுப்பினால் அந்த செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை.! பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,Delhi ,Union government ,Union Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு...