×

புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: விசாரணையில் தகவல்

புனே: கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் பணம் மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி பரிசோதனை அறிக்கையை அளித்த 2 மருத்துவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த 19ம் தேதியன்று 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மென்பொருள் இன்ஜினியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கிய சிறார் நீதிமன்றம், பல்வேறு தரப்பினரிடையே எழுந்த அதிருப்தியை அடுத்து ஜாமீனை ரத்து செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை அடைக்க உத்தரவிட்டது.

மேலும், சிறுவனை காரை ஓட்ட அனுமதித்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். கார் விபத்தில் சிறுவனை கைது செய்த போலீசார், சிறுவன் மது போதையில் கார் ஓட்டியதை உறுதி செய்ய சிறுவனின் ரத்த மாதிரியை ஆய்வுக்காக சசூன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், ஆய்வு முடிவில் சிறுவன் மது அருந்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பாரில் சிறுவன் மது அருந்திய சிசிடிவி காட்சிகளை போலீசார் கைபற்றினர். இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சிறுவனின் தந்தை சசூன் மருத்துவமனை தடயவியல் துறை டாக்டர் அஜய் தாவாரேவை தொடர்புகொண்டு, தனது மகனின் ரத்த மாதிரிக்கு பதிலாக வேறொரு ரத்த மாதிரியை மாற்றி வைக்குமாறு கேட்டது தெரியவந்தது. அதற்காக பணம் தருவதாகவும் ஆசை காட்டி இருக்கிறார். இதையடுத்து ரத்த பரிசோதனையின்போது டாக்டர்கள் அஜய் தாவாரே, ஸ்ரீஹரி ஹல்னார் மற்றும் மருத்துவமனை ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகியோர் ரத்த மாதிரியை மாற்றி வைத்து மது குடிக்காத ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கை தந்துள்ளனர்.

இதையடுத்து டாக்டர்கள் அஜய் தாவாரே மற்றும் ஸ்ரீஹரி ஹல்னார், ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வரும் 30ம் தேதிவரை 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றுவதற்காக தடையவியல் மருத்துவர்களுக்கு லஞ்சமாக ரூ.3 லட்சம் பணத்தை சிறுவனின் தந்தை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புனேவில் சிறுவன் போர்ச்சே கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 மென்பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

The post புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pune ,Pune Kalyani, Maharashtra ,Dinakaran ,
× RELATED புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக...