×

உழவர் சந்தையில் ஐபோன் திருடிய வடமாநில வாலிபர்

 

சேலம், மே 28: சேலம் தாதகாப்பட்டி அம்பாள்ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (41). இவர் நேற்று முன்தினம் காலை தாதகாப்பட்டி உழவர்சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அங்கு காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது, அருகில் வந்த வாலிபர் ஒருவர் நைசாக சக்திவேலிடம் இருந்து ₹75 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை திருடிக்கொண்டு ஓடினார். இதனை கவனித்த சக்திவேல், தனது போனை திருடிச் செல்வதாக கூச்சலிட்டார். உடனே பக்கத்தில் நின்றிருந்த பொதுமக்கள், திருட்டில் ஈடுபட்ட வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் தர்மஅடி கொடுத்து, அன்னதானப்பட்டி போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். எஸ்.ஐ., வீரன் தலைமையிலான போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், ஜார்க்கண்ட் மாநிலம் மகாராஜ்பூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (எ) ரவிதாஸ் (20) எனத்தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட ஐபோனை போலீசார் மீட்டனர். பின்னர், சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post உழவர் சந்தையில் ஐபோன் திருடிய வடமாநில வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Sakthivel ,Dadagapatti Ambaleri Road ,Dadakapatti ,
× RELATED மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்