×

திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

திருவாடானை, மே 28: திருவாடானையில் இருந்து சின்னக்கீரமங்கலம், ஓரிக்கோட்டை, நெய்வயல் வழியாக தேவகோட்டைக்கு நெடுஞ்சாலை உள்ளது. சின்னக்கீரமங்கலம் மகளிர் காவல் நிலையம் அருகே இந்த சாலையின் குறுக்கே சிறிய பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால், குழி தோண்டப்பட்டு ஒரு மாதமாகியும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பால பணிக்காக அந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், அந்த சாலை முறையாக அமைக்கப்படாததால் அவ்வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதற்காக திருவாடானையில் இருந்து சின்னக்கீரமங்கலம், ஓரிக்கோட்டை, நெய்வயல் வழியாக தேவகோட்டை செல்லும் வழித்தடத்தில் தினசரி 4 முறை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் சேவையும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சாலை வழியாக மீண்டும் டவுன் பஸ்கள் செல்லும் வகையில் தற்காலிக சாலையை சீரமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnakeeramangalam ,Thiruvadan ,Thiruvadanai ,Devakottai ,Orikotta ,Neywayal ,Chinnakeeramangalam Women's Police Station ,Chinnakeeramangalam bridge ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் 2ம்...