×

ரூ.74.75 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டும் 10 ஆண்டுகளாக மந்த கதியில் பாதாள சாக்கடை பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

 

பொன்னேரி, மே 28: பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ரூ.74.75 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் என உள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டம் 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பின்னர் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி, நிதி ஒதுக்குவதில் கால அவகாசம் காரணமாக தாமதம் ஏற்பட்டு கடந்த 2013ம் ஆண்டு பணி துவங்கப்பட்டு ரூ.54.48 கோடி மதிப்பீட்டில் ஆறாண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2016ம் ஆண்டு கூடுதலாக 20 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதாள சாக்கடை முழு திட்டத்திற்கு இரண்டாவது தவணையும் சேர்த்து ரூ.74 கோடி 75 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 41 கிலோமீட்டர் தூரம் நடைபெற்று வருகிறது. கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமலும், தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக்கப்பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருவதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாதபடி பொதுமக்கள் அவதிப்பட்டும், நோயாளிகளை வாகனத்தில் ஏற்றி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் மழை காலங்களில் மாணவர்கள் உடைகளில் சகதியோடு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே, மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ரூ.74.75 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டும் 10 ஆண்டுகளாக மந்த கதியில் பாதாள சாக்கடை பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Mandakathi ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது