×

போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

பூந்தமல்லி, மே 28: போரூர் ஏரியில் அதிகளவு படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில் போரூர் ஏரியும் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரி தூர் வாரப்பட்டது. இதன்மூலம் 46 மில்லியன் கனஅடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கும் அளவுக்கு ஏரி ஆழப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில் ரூ.1.85 கோடி செலவில் தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம், தினசரி 40 லட்சம் லிட்டர் அளவு ஏரியின் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக போரூர் ஏரி நிரம்பி வழிந்தது. கடந்த 3 மாதங்களாக கடும் கோடை வெப்பத்தால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மேலும் ஏரி தண்ணீர் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து செழித்து வளர்ந்துள்ளன. சாதாரணமாக தண்ணீர் ஆவியாகும் அளவைவிட ஆகாயத்தாமரை செடிகளால் உறிஞ்சப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. ஆகாயத்தாமரை செடி அதிகளவு படர்ந்து உள்ளதால் ஏரியின் தண்ணீர் பரப்பிற்குள் ஆக்சிஜன், சூரிய ஒளி செல்வது தடைபடுகிறது. இதனால் பிராணவாயு குறைந்து மீன்கள், தவளை, பாம்புகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களும், நன்மை தரும் செடிகளும் அழியக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இவற்றை நம்பி வரும் பறவைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது. ஆகாய தாமரையின் இலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில், ‘டெங்கு’ உள்ளிட்ட பல்வேறு கொசுக்கள் அதிகளவில் முட்டையிட்டு இனப்பெருக்கம் ஆகின்றன. இதனால் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இந்த ஆகாய தாமரை செடிகள் ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மடை, மதகுகளை அடைத்துக்கொண்டு விடுகிறது.

மேலும் ஆகாயத்தாமரை செடிகள் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒரு தாவரமாக கருதப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைவதுடன் தண்ணீர் மாசுபாடு அடைகிறது. பெரும்பாலான நீர் நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றுவது சவாலாக உள்ள நிலையில் போரூரில் ஏரியில் படர்ந்து செழித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Borur lake ,Poontamalli ,Chennai ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி