×

ஆந்திரா தேர்தல் வன்முறை சம்பவங்களில் 550 பேர் கைது: வெளிமாநிலங்களில் பதுங்கியவர்களுக்கு வலை

திருமலை: ஆந்திராவில் நடந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் பதுங்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம் தேதி சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பல்நாடு மாவட்டத்தில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனந்தபுரம் மாவட்டம் தாடிப்பத்திரியில் 234 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யபட்டனர். மாநிலம் முழுவதும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை வன்முறை சம்பவத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக வைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் வன்முறை சம்பவங்கள் ஈடுப்பட்டவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் பதுங்கி இருப்பதாகவும் தேர்தல் முடிவு வந்த பிறகு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் பதுங்கி இருப்பவர்களால் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மறுபுறம் வாக்கு எண்ணிக்கை அன்றும், அதன் பிறகு எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அதற்கு ஏற்ப பாதுகாப்பு வழங்கி மீண்டும் வன்முறை சம்பவம் நடக்காமல் தடுக்க பல இடங்களில் துணை ராணுவத்தினருடன் போலீசார் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா உத்தரவின்படி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 502 பகுதிகளில் சோதனை மற்றும் தேடுதல் பணியின்போது 2,602 முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர். 7 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 307 லிட்டர் கள்ளச்சாராயம், 4,616 லிட்டர் நாட்டுச்சாரயம், ஒரு நாட்டு துப்பாக்கி, 93 ஆயிரத்து 600 லிட்டர் சாராய ஊறல் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திரா தேர்தல் வன்முறை சம்பவங்களில் 550 பேர் கைது: வெளிமாநிலங்களில் பதுங்கியவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Election ,Andhra Pradesh ,Andhra ,
× RELATED திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை...