×

மக்களவை தேர்தல் பிரசார நிறைவுக்கு பின்னர் பிரதமர் மோடி மே 30ம் தேதி கன்னியாகுமரி வருகை: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்

நாகர்கோவில்: நாடாளுமன்ற மக்களவைக்கான 7 கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. ஜூன் 1ம் தேதி இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மே 30ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் மே 30ம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரலாம் என்றும், அவர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டப தியான கூடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார் என்றும் தகவல் வெளியானது. கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது இறுதி கட்ட பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு பாரம்பரிய உடை அணிந்து கேதார்நாத் கோயில் பனிக்குகையில் தியானம் செய்தார்.

கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயர பனிக்குகையில் 30 நிமிடம் அவர் தியானம் செய்தார். இந்த முறை அவர் கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாள் தியானம் செய்து ஜூன் 1ம் தேதி டெல்லி திரும்புவார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தல் பிரசார நிறைவுக்கு பின்னர் பிரதமர் மோடி மே 30ம் தேதி கன்னியாகுமரி வருகை: விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kanyakumari ,Lok Sabha elections ,Vivekananda Hall ,NAGARGO ,Lok Sabha ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...