×

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் அனைவரின் அழைப்பு பதிவுகளும் கண்டிப்பாக விசாரிக்கப்படும்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை

புதுடெல்லி: சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் அழைப்பு விவரப் பதிவுகளும் அவசியம் விசாரிக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 13ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாதி மாலிவால், முதல்வரின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக சுவாதி மாலிவால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமாரை கைது செய்தது. இந்த நிலையில் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளரான பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் முதல்வர் இல்லத்திற்கு சுவாதி மாலிவால் சென்ற பிறகு தான், அங்கு பிபவ் குமார் வருவதற்கு அழைக்கப்பட்டார் என்பது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அவர் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் அழைக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் அழைப்பின் விவரப் பதிவுகளையும் விசாரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கண்டிப்பாக அது மேற்கொள்ளப்படும். தற்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் காவல்துறை ஆணையத்தின் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளது.

* ஜாமீன் மனு தள்ளுபடி
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி தீஸ் அசாரி மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

The post சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் அனைவரின் அழைப்பு பதிவுகளும் கண்டிப்பாக விசாரிக்கப்படும்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Swati ,National Commission for Women ,New Delhi ,Swati Maliwal ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Arvind ,
× RELATED வேலை கேட்டு வந்த பெண்ணிடம் அமைச்சர்...