×

விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ6,431 கோடியில் புதிதாக போட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ், ஆய்வு செய்ய குழு வருகை

விழுப்புரம்: விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போட்ட தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த சாலையை மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளனர்.

இந்நிலையில் பல இடங்களில் சாலையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை பணிகள் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பள்ளம் தோண்டி மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்து வருகிறது. புதிதாக போடப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இந்த சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் விசாரித்தபோது பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதியில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சாலை பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து 6 பேர் கொண்ட குழு வர உள்ளதாகவும், அதன் பிறகு குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

 

The post விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ6,431 கோடியில் புதிதாக போட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ், ஆய்வு செய்ய குழு வருகை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Nagapattinam National Highway ,Nagapattinam ,Puducherry ,Cuddalore ,Villupuram - ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.....