×

கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க முடிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளான வரும் ஜூன் 1ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில், கூட்டணியின் தேர்தல் செயல்பாடு குறித்தும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி எனும் வலுவான கூட்டணியை அமைத்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து, ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் களமிறங்கி உள்ளன. முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டுள்ளதால் இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. முதலில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமர் குறித்து முடிவெடுக்கவும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து முடிவெடுத்தன. இதனால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே இந்தியா கூட்டணி தேர்தலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், 6 கட்ட மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி டெல்லியில் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க மல்லிகார்ஜூன கார்கே நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தேர்தல் செயல்பாடு குறித்தும், அடுத்தகட்ட உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கூட்டம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், மக்களவை தேர்தலுக்கு முன்பாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். கெஜ்ரிவாலின் ஜாமீன் வரும் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், கெஜ்ரிவாலின் ஜாமீன் முடியும் முன்பாக இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஜூன் 1ம் தேதியுடன் மக்களவை தேர்தல் முடிவடைந்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதற்கு முன்பாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் இந்தியா கூட்டணி கூட்டம் ஜூன் 1ம் தேதி கூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

The post கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,New Delhi ,India Coalition ,Lok Sabha ,Delhi ,Dinakaran ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...