×

மழையால் பசுமைக்கு மாறிய காடுகள் காட்டு தீ அபாயம் குறைந்ததால் வனத்துறையினர் நிம்மதி

மஞ்சூர் : மழையால் காடுகள் பசுமையாக மாறியதுடன் காட்டு தீ அபாயம் இல்லாததால் வனத்துறையினர் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை.தமிழக-கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் இரு மாநிலங்களுக்கு சொந்தமான அடர்ந்த காடுகள் ஏராளமாக உள்ளது. இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் நெல்லிக்காய்,கடுக்காய் கொண்ட மருத்துவ குணம் கொண்ட மரங்களுடன் வனவிலங்குகளும் அதிகளவில் உள்ளது.இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து அறவே மழை பெய்யாததால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. மரம்,செடி,கொடிகள்,புல்வெளிகள் காய்ந்து கருகிபோனது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு போனதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வன விலங்குகள் இடம் பெயர்வது அதிகரித்தது.

மேலும் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கோரகுந்தா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ 3நாட்களுக்கு மேலாக பற்றி எரிந்தது. இதேபோல் தமிழக எல்லையை ஒட்டிய ேகரளா வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது.

இதை தொடர்ந்து குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த சில தினங்களாக குந்தா பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் வறட்சியின் தாக்கம் குறைந்து வனப்பகுதிகள் மீண்டும் பசுமைக்கு மாறியுள்ளது. இதனால் காட்டு தீ அபாயம் முற்றிலுமாக நீங்கியுள்ளதால் வனத்துறையினர் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

The post மழையால் பசுமைக்கு மாறிய காடுகள் காட்டு தீ அபாயம் குறைந்ததால் வனத்துறையினர் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Manjoor ,Kinnakorai ,Nilgiri district ,Tamil-Kerala ,Dinakaran ,
× RELATED கிண்ணக்கொரை மேலூரில் தெவ்வ திருவிழா