×

திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ்

பழநி: பாஜ நிர்வாகிகள் சொத்து மதிப்பை ஆய்வு செய்ய வேண்டுமென, பாலியல் வழக்கில் கைதான முன்னாள் மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜவில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. கடந்த மாதம் பாஜ மாவட்டச் செயலாளராக இருந்த, மகுடீஸ்வரன், காலை உணவுத்திட்ட பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

இதன் காரணமாக பாஜ மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாவட்டத் தலைவர் கனகராஜ் மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கிடையே, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் மகுடீஸ்வரனே வேட்பாளராக இருப்பாரென பரவலாக பேச்சு இருந்தது. ஆனால், கூட்டணி கட்சியான பாமகவிற்கு சீட் வழங்கப்பட்டு விட்டது. இதனால் மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

எம்பி சீட் பெற்று தருவதாகக் கூறி மகுடீஸ்வரனிடம் பாஜ மாவட்ட நிர்வாகிகள் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சீட் கிடைக்காததால் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதுமுதல் மாவட்ட நிர்வாகிகள் சிலருடன், மகுடீஸ்வரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே, பாஜ மாவட்டப் பொருளாளர் ஆனந்த் கடந்த 16ம் தேதி மகுடீஸ்வரனுக்கு அனுப்பிய நோட்டீசில் ரேக்ளா போட்டி நடத்துவதாக கூறி புஷ்பத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் ரூ.1 கோடி அளவிற்கு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அந்த பணத்தை உடனடியாக கட்சியின் மாவட்ட வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டுமென்றும், செலுத்தாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்த நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் முன்னாள் மாவட்டச் செயலாளரான மகுடீஸ்வரன் பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘‘எனக்கு வேண்டாத நபர்களின் பேச்சைக் கேட்டு பொய்யான சங்கதிகளை சொல்லி அறிவிப்பு அனுப்பி உள்ளீர்கள். கட்சிப் பணிக்கு எனது சொந்தப் பணத்தை செலவு செய்து வந்தேன்.

பாஜ மேற்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் தற்போதைய சொத்து மதிப்பை ஆய்வு செய்தால், யார் கட்சியின் பெயரைச் சொல்லி பணம் வாங்கி சொத்துக்கள் வாங்கி உள்ளார்கள் என்பது தெரியவரும். மாவட்டப் பொருளாளர் அனுப்பிய அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக பதில் தராவிட்டால், சட்டப்படி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜவில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தை அடைந்து, மாறி மாறி நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Goshtipuzal ,Dindigul Baja ,District Secretary ,Palani ,Former ,Magudishwaran Borkodi ,Bahaja ,Dindigul ,Bajaj ,Khoshtipuzal Uchakram Baja ,Kaidan ,District ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்